/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அங்கன்வாடி மையத்தை மாற்றுங்க! ஜல்லிபட்டி மக்கள் எதிர்பார்ப்பு
/
அங்கன்வாடி மையத்தை மாற்றுங்க! ஜல்லிபட்டி மக்கள் எதிர்பார்ப்பு
அங்கன்வாடி மையத்தை மாற்றுங்க! ஜல்லிபட்டி மக்கள் எதிர்பார்ப்பு
அங்கன்வாடி மையத்தை மாற்றுங்க! ஜல்லிபட்டி மக்கள் எதிர்பார்ப்பு
ADDED : நவ 14, 2024 04:34 AM

உடுமலை: உடுமலை ஒன்றியத்தில், மக்கள் தொகை அதிகம் உள்ள ஊராட்சிகளில் ஜல்லிபட்டியும் ஒன்று. இங்கு, அரசு மருத்துவமனைக்கு அருகிலுள்ள குழந்தைகளுக்கான அங்கன்வாடி மையத்தின் நிலை மோசமாக இருப்பதால், இங்குள்ள குழந்தைகள் நாள்தோறும் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.
மையத்தில் 'அஸ்பெட்டாஷ்' சீட்டில் மேற்கூரை போடப்பட்டுள்ளது. மையத்தின் சுற்றளவில் பாதிவரை மட்டுமே சுவர் எழுப்பப்பட்டுள்ளது. மீதியிலிருந்து மேற்கூரை வரை கம்பிகள் போடப்பட்டுள்ளன.
அந்த சுவரிலும், கற்கள் வெளியில் தெரியும் அளவுக்கு, சிதிலமடைந்துள்ளது. அங்கன்வாடியின் முன்புறம், மண் தரையாக இருப்பதோடு, ரோட்டை விட்டு பள்ளத்தில் உள்ளது.
இதனால் மழை நாட்களில் மையத்தின் நிலை படுமோசமாகிறது. மழைநீர் உள்ளே புகுந்து விடுவதால், அவற்றில் விஷப்பூச்சிகளும் வருகின்றன. மழை நின்றாலும், அடுத்த சில நாட்களுக்கு மையத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது.
மையத்தின் சுற்றுச்சுவர் பாதியிலிருந்து சுற்றிலும் கம்பிகள் மட்டுமே இருப்பதால், அவற்றின் வழியாகவும் மழைச்சாரல் வீசுகிறது. மேற்கூரையும் சிதிலமடைந்துள்ளது.
அங்கு அடிப்படை வசதி குறைவாக இருப்பினும், வேறுவழியில்லாமல் குழந்தைகளை பெற்றோர் விட்டுச்செல்கின்றனர்.
பிரச்னை குறித்து புகார் அளித்தும் துறை ரீதியாகவும், உள்ளாட்சி நிர்வாகமும் நடவடிக்கை எடுக்கவில்லை என பெற்றோர் அதிருப்தியில் உள்ளனர்.
அங்கன்வாடி மையத்தை, வேறு புதிய உறுதியான பாதுகாப்பான கட்டடத்தில் மாற்ற வேண்டுமென, பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.

