/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கருகிய நெற்பயிர்; கண்துடைப்புக்கு கூட்டம்; அதிகாரிகளுடன் வாக்குவாதம்
/
கருகிய நெற்பயிர்; கண்துடைப்புக்கு கூட்டம்; அதிகாரிகளுடன் வாக்குவாதம்
கருகிய நெற்பயிர்; கண்துடைப்புக்கு கூட்டம்; அதிகாரிகளுடன் வாக்குவாதம்
கருகிய நெற்பயிர்; கண்துடைப்புக்கு கூட்டம்; அதிகாரிகளுடன் வாக்குவாதம்
ADDED : டிச 04, 2024 10:07 PM

உடுமலை; மடத்துக்குளம் தாலுகா அமராவதி அணை பாசன பகுதிகளான வேடபட்டி, கண்ணாடிப்புத்துார், நீலம்பூர், செங்கண்டிபுதுார் உள்ளிட்ட பகுதிகளில், நெல் சாகுபடி பிரதானமாக உள்ளது.
நடப்பு சீசனில், நெல் வயல்களில், களைக்கொல்லி தெளித்த பிறகு, சில நாட்களிலேயே நெற்பயிர்கள் முற்றிலுமாக கருகியது.
உடுமலை பகுதியில் உள்ள, தனியார் உரக்கடையில் வாங்கிய களைக்கொல்லி மருந்தே இதற்கு காரணம் என, திருப்பூர் கலெக்டரிடம் பாதிக்கப்பட்ட விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
வேளாண்துறையினர் சம்பந்தப்பட்ட விவசாயிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தி தீர்வு காண, கலெக்டர் கிறிஸ்துராஜ் உத்தரவிட்டார்.
இதையடுத்து நேற்று, திருப்பூர் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சுந்தரவடிவேல், கலெக்டர் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஷீலா, வேளாண் விஞ்ஞானி துர்க்கையன், மடத்துக்குளம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் தேவி அடங்கிய குழுவினர் பங்கேற்ற ஆலோசனைக்கூட்டம் ஜோத்தம்பட்டியில் நடந்தது. அப்போது பாதித்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து பேசாமல், பயிர் காப்பீடு மற்றும் பயிர் சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து பேச துவங்கினர். இதனால், ஆவேசம் அடைந்த விவசாயிகள், அதிகாரிகளை பாதிக்கப்பட்ட நெற்பயிருடன் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
விவசாயிகள் கூறியதாவது: நடப்பு சீசனில் போலி களைக்கொல்லி, பூச்சிக்கொல்லி மருந்தால், 300 ஏக்கரில், நெற்பயிர்கள் பாதித்துள்ளது. வாழ்வாதாரம் இழந்து விவசாயிகள் தவித்து வரும் நிலையில், வேளாண்துறையினர் கண்துடைப்புக்காக கூட்டம் நடத்துகின்றனர்.
மூன்று மணி நேரம் தாமதமாக துவங்கியதால், பெரும்பாலான விவசாயிகள் கூட்டத்தை புறக்கணித்து சென்று விட்டனர். இழப்பீடு பெற்று தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தனியார் உரக்கடைகளில் முறையாக அதிகாரிகள் ஆய்வு செய்து, தரமற்ற உரம் மற்றும் களைக் கொல்லி மருந்துகளை விற்பனை செய்யும் உரக்கடைகளின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். இல்லாவிட்டால், வேளாண்துறையை கண்டித்து தொடர் போராட்டம் நடத்துவோம்.
இவ்வாறு, விவசாயிகள் தெரிவித்தனர்.