ADDED : ஆக 10, 2025 02:54 AM

'திருட்டு மாங்காய்க்கு ருசி அதிகம்' என்று கிராமங்களில் ஒரு சொலவடை உள்ளது. இது மாங்காய்க்கு பொருந்துகிறதோ இல்லையோ, தற்போது சிக்கன் பிரியாணிக்கும், நாட்டுக்கோழி வறுவலுக்கும் பொருத்தமாக உள்ளது.
தற்போது ஆடு, கோழி திருட்டு அதிகரித்து வருகிறது. மேய்ச்சலுக்கு விடப்படும் ஆடுகளை வந்து திருடிச் செல்வது; வீதிகளில் குப்பையைக் கிளறி உணவு தேடும் கோழிகளை திருடிச் சென்று உணவாக்கிக்கொள்வதும் நடக்கிறது. திருடர்கள் அதிவேக பைக்குகள் மற்றும் சொகுசு கார்களில்தான் வருகின்றனர்.
அவிநாசி, காங்கயம் போன்ற பகுதிகள் பெருமளவு கிராமங்களை உள்ளடக்கியதாக உள்ளது. இங்கு கோழி மற்றும் ஆடு வளர்ப்பு தனி தொழிலாகவும், விவசாய தோட்டங்களில் துணை தொழிலாகவும் செய்து வருகின்றனர். சமீப காலமாக ஆங்காங்கே மேய்ச்சலுக்கு செல்லும் ஆடுகள் திருடப்பட்டு வந்தது. தற்போது வீடுகளின் முன்புறம் கூண்டுகளில் அடைத்து வைக்கப்படும் கோழிகள், தெருவில் சுற்றித் திரியும் கோழிகள் திருடு போகிறது.
இவை வார இறுதி நாட்களில் தான் அதிகளவில் நிகழ்கிறது. வீடுகளில் வளர்க்கப்படும் நாட்டுக்கோழிகள் ஆயிரக்கணக்கில் விலை போகக்கூடியவை.
இதில் ஈடுபடும் நபர்கள், பெரிய அளவிலான திருட்டு தொழில் செய்யும் நபர்களாக இருக்க வாய்ப்பு குறைவு எனக்கூறும் கோழி வளர்ப்போர், போகிற போக்கில், நண்பர்களுடன் கூட்டு சேர்ந்து கொண்டு ஜாலிக்கு திருடுவோராகக் கூட இருக்கலாம். இத்தகைய திருட்டில் ஈடுபடுவோர் ஏதாவது ஒரு இடத்தில் சிக்கிவிட்டால் அந்த விஷயம் பரவலாகி விடும். அந்தப் பகுதியை சில காலம் விட்டு விட்டு, வேறிடங்களில் தங்கள் கைவரிசையைக் காட்டுவர். இதைப் போலீசாரும் கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர்.