/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கிராமங்களில் அதிகரித்து வரும் குழந்தை திருமணம்; மக்களிடம் விழிப்புணர்வு இல்லை
/
கிராமங்களில் அதிகரித்து வரும் குழந்தை திருமணம்; மக்களிடம் விழிப்புணர்வு இல்லை
கிராமங்களில் அதிகரித்து வரும் குழந்தை திருமணம்; மக்களிடம் விழிப்புணர்வு இல்லை
கிராமங்களில் அதிகரித்து வரும் குழந்தை திருமணம்; மக்களிடம் விழிப்புணர்வு இல்லை
ADDED : ஆக 08, 2025 08:20 PM
உடுமலை; உடுமலை சுற்றுப்பகுதி கிராமங்களில், அதிகரித்து வரும் குழந்தை திருமணங்களை தடுக்கவும், கட்டுப்படுத்தவும், விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
குழந்தை திருமணம் செய்வதால் ஏற்படும், உடல்நல பிரச்னைகள் குறித்தும், அவர்களின் வாழ்க்கை பாதிக்கப்படுவது பற்றியும், கிராமங்களில் விழிப்புணர்வு குறைவாகவே உள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில், உடுமலை சுற்றுப்பகுதியில் குறைந்த பட்சம், ஒரு மாதத்தில் இரண்டு வீதம் சமூக நலத்துறையில், குழந்தை திருமணம் குறித்து புகார் பதிவு செய்யப்படுகிறது.
கிராமங்களில் குழந்தை திருமணத்தால் ஏற்படும் பிரச்னை குறித்து, முழுமையான விழிப்புணர்வு இல்லாததும், இவ்வாறு செய்வதன் வாயிலாக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுவது குறித்தும் அலட்சியமாக இருப்பதுதான், இது அதிகரிப்பதற்கு காரணமாக உள்ளது.
கிராமங்களில் இத்தகைய பிரச்னைகளை தவிர்க்கவும், பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமைகளிலிருந்து பாதுகாப்பதற்கும், பெண் குழந்தைகள் பாதுகாப்பு குழு உள்ளது. ஆனால் இக்குழுக்கள் வாயிலாக, எந்த நடவடிக்கைகளும் கிராமங்களில் மேற்கொள்ளப்படுவதில்லை.
குழந்தை திருமணம் தவறு என்பதை இன்னும் அழுத்தமாகவும், அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், பெண்களுக்கு விழிப்புணர்வு அவசியமாகியுள்ளது.
இவ்வாறு திருமணம் செய்வோர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் பட்சத்தில், அவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாக மாறுவதுடன், பச்சிளம் குழந்தைகளின் எதிர்காலமும் மோசமான நிலைக்கு தள்ளப்படுகிறது.
டாக்டர்கள் கூறியதாவது: பெண்களின் உடல்நிலை, ஒரு குழந்தை பேறு பெறுவதற்கு தயாராவதற்கு குறிப்பிட்ட காலம் உள்ளது. ஆனால், குழந்தை திருமணம் நடப்பதால், அவர்களின் உடல்நிலை குறித்து எந்த விழிப்புணர்வும் இல்லாமல், குழந்தை பேறு வரை செல்கின்றனர்.
இதனால் ரத்தசோகை உட்பட பல நோய்களுக்கு மிக எளிதில் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். பிறக்கும் குழந்தைகளுக்கும் குறைபாடு ஏற்படுகிறது.
இதற்கென சிறப்பு குழு அமைத்து, தொடர்ந்து கண்காணிப்பில் இருப்பதால் மட்டுமே இப்பிரச்னையை தவிர்க்க முடியும். பெண் குழந்தைகளுக்கு மட்டுமின்றி, அவர்களின் பெற்றோருக்கும் ஆலோசனை அளிக்க வேண்டும்.
இவ்வாறு, தெரிவித்தனர்.