/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
முக்கிய ரோட்டில் 'குடி'மகன்கள் தொல்லை; அச்சத்துடன் கடக்கும் மக்கள்
/
முக்கிய ரோட்டில் 'குடி'மகன்கள் தொல்லை; அச்சத்துடன் கடக்கும் மக்கள்
முக்கிய ரோட்டில் 'குடி'மகன்கள் தொல்லை; அச்சத்துடன் கடக்கும் மக்கள்
முக்கிய ரோட்டில் 'குடி'மகன்கள் தொல்லை; அச்சத்துடன் கடக்கும் மக்கள்
ADDED : ஆக 14, 2025 08:19 PM

உடுமலை; உடுமலை நகரில், பிரதான ரோட்டில், செயல்பட்டு வரும் 'டாஸ்மாக்' மதுக்கடையால், அவ்வழியாக செல்லவே மக்கள் அச்சப்படும் நிலை உள்ளது.
உடுமலை நகரம், ராஜேந்திரா ரோட்டில், தினசரி சந்தை, கேந்திரியா வித்யாலயா பள்ளி, நகராட்சி நடுநிலைப்பள்ளி, ரயில்வே ஸ்டேஷன் மற்றும் வரிசையாக கடைகள் அமைந்துள்ளன.
மக்கள் நடமாட்டம் மிகுந்த இந்த ரோட்டில், நால்ரோடு சந்திப்பு அருகே, 'டாஸ்மாக்' மதுக்கடை செயல்பட்டு வருகிறது.
இந்த கடைக்கு வரும் 'குடி'மகன்கள், அட்டகாசத்தால், முக்கிய ரோட்டில், மக்கள் நடமாடவே அச்சப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அருகிலுள்ள பள்ளி மற்றும் ரோட்டை திறந்தவெளி 'பார்' ஆக மாற்றிக்கொள்கின்றனர்.
இதனால், மாலை நேரங்களில், சர்தார் வீதி உட்பட அருகிலுள்ள வீதிகளில், பெண்கள் நடந்து செல்ல முடிவதில்லை. மேலும், பள்ளி அருகிலும், கடைகள் முன்பும், குடித்து விட்டு காலி பாட்டில்களை வீசி எறிந்து அட்டகாசம் செய்வது அதிகரித்துள்ளது.
ரோட்டோரத்தில், உடைக்கப்படும் பாட்டில் துண்டுகள், அவ்வழியாக ரயில்வே ஸ்டேஷன் மற்றும் பஸ் ஸ்டாண்டுக்கு செல்லும் பாதசாரிகளை பதம் பார்க்கிறது.
மதுக்கடைக்கு, அருகிலும், எதிரிலும், உள்ள பிற கடையினர், நாள்தோறும் காலி மதுபாட்டில்களை அப்புறப்படுத்திவிட்டே, கடையை திறக்க வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
மேலும், குடிபோதையில், இரவு நேரங்களில், 'குடி'மகன்கள் பல்வேறு சமூக விரோத செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்; விபத்துகளும் அப்பகுதியில், அதிகரித்து வருகிறது.
நகரின் பிரதான ரோட்டில் அமைந்துள்ள, 'டாஸ்மாக்' மதுக்கடையை இடம் மாற்ற வேண்டும் என மக்கள் பல முறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை.
அதே போல், போக்குவரத்து மிகுந்த ரோட்டில், மது குடிப்பவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் கண்டுகொள்ளப்படவில்லை.
ராஜேந்திரா ரோட்டிலுள்ள 'டாஸ்மாக்' மதுக்கடையை இடம் மாற்ற வேண்டும். உடனடியாக மாலை, இரவு நேரங்களில், கண்காணிப்புக்காக அப்பகுதியில், போலீசாரை நியமித்து, பயணிகள், ராஜேந்திரா ரோட்டை அச்சமின்றி கடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.