/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'குடி'மகன்களே... பாட்டிலை இங்கே போடுங்க! கதறும் விவசாயிகள்; அறிவிப்பு பலகை வைப்பு
/
'குடி'மகன்களே... பாட்டிலை இங்கே போடுங்க! கதறும் விவசாயிகள்; அறிவிப்பு பலகை வைப்பு
'குடி'மகன்களே... பாட்டிலை இங்கே போடுங்க! கதறும் விவசாயிகள்; அறிவிப்பு பலகை வைப்பு
'குடி'மகன்களே... பாட்டிலை இங்கே போடுங்க! கதறும் விவசாயிகள்; அறிவிப்பு பலகை வைப்பு
ADDED : மே 04, 2025 10:00 PM

உடுமலை, ; உடுமலை அருகே, காலி மதுபாட்டில்களை விளைநிலம் முழுவதும் வீசிச்செல்லும் 'குடி'மகன்களால், தொடர்ந்து பாதிக்கப்பட்ட விவசாயிகள், பாட்டில்களை சேகரிக்க தொட்டியும், அறிவிப்பும் வைத்தும், தங்கள் வேதனையை வெளிப்படுத்தியுள்ளனர்.
உடுமலை அருகே தளியில், எரிசனம்பட்டி ரோட்டில் 'டாஸ்மாக்' மதுக்கடை செயல்பட்டு வருகிறது. பிரதான ரோட்டையொட்டி ஒரு தென்னந்தோப்பில் இந்த மதுக்கடை உள்ளது. அருகிலும், தென்னை உள்ளிட்ட சாகுபடி விளைநிலங்கள் அதிகளவு உள்ளது.
இந்நிலையில், மதுபாட்டில்களை வாங்கும் 'குடி'மகன்கள் அருகிலுள்ள தென்னை மரங்களின் கீழ் அமர்ந்து மது அருந்துகின்றனர். ரோட்டையொட்டியும் வரிசையாக அமர்ந்து கொள்கின்றனர்.
மேலும், காலி மதுபாட்டில்களை அருகிலுள்ள தென்னந்தோப்புகளில் வீசிச்செல்கின்றனர்; பாட்டில்கள் உடைந்து கண்ணாடி துகள்கள் விவசாயிகளை பதம் பார்க்கிறது. பல முறை கோரிக்கை விடுத்தும், எச்சரித்தும், அத்துமீறி தென்னந்தோப்பில் உட்கார்வது மாறவில்லை.
நொந்து போன விவசாயிகள், தளி போலீசிலும் புகார் கொடுத்தனர். ஆனால், போலீசார் அந்தபக்கமே எட்டிப்பார்ப்பதில்லை.
மதுக்கடையில் இருந்து ஒரு கி.மீ., க்கு, ரோட்டின் இருபுறங்களிலும், மதுபாட்டில்கள் குவியல்கள் குறையவே இல்லை.
பாதிக்கப்பட்ட விவசாயிகள் தற்போது, ரோட்டோரத்தில், ஒரு பிளாஸ்டிக் தொட்டியை வைத்து, அதன் மேல் அறிவிப்பு பலகையும் வைத்துள்ளனர். அதில், 'இங்கு மது அருந்துபவர்கள் பாட்டிலை இங்கு போடவும்,' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உணவு பொருள் விளைவிக்கும் விவசாயிகள் கால்களை, காலி மதுபாட்டில்கள் பதம் பார்த்தாலும், அவர்களை 'குடி'மகன்கள் என்ன செய்தாலும், போலீசாரும், திருப்பூர் மாவட்ட நிர்வாகமும் கண்டுகொள்ளாது என்பதற்கு உதாரணம்தான் இந்த அறிவிப்பு பலகையும், சேகரிப்பு தொட்டியும்.