/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அரசு மருத்துவமனைக்கு துாய்மைப்பணியாளர்கள்
/
அரசு மருத்துவமனைக்கு துாய்மைப்பணியாளர்கள்
ADDED : நவ 03, 2025 11:55 PM

பல்லடம்:  பல்லடம், தேசிய நெடுஞ்சாலையில் அரசு மருத்துவமனை அமைந்துள்ளது.
மொத்தம், 3.50 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட பல்லடம் வட்டாரத்துக்கு, இது, தலைமை மருத்துவமனையாக உள்ளது. நோய் தொற்று பாதிப்பு, கர்ப்ப கால சிகிச்சை, அவசர மற்றும் தீவிர சிகிச்சை, வாகன விபத்துகள், பெண்கள், குழந்தைகளுக்கான சிகிச்சை என, பல்வேறு சிகிச்சைகளுக்காக, தினசரி, 700க்கும் அதிகமான புறநோயாளிகள் மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர்.
இவ்வாறு, பல்லடம் பகுதி மக்களுக்கு பிரதானமாக உள்ள இந்த மருத்துவமனையில், நோயாளிகள் பயன்படுத்திய பின் வீசி எறியும் பிளாஸ்டிக் பாட்டில்கள், குப்பைகள், கழிவுகள் உள்ளிட்டவை, தினசரி மருத்துவமனை வளாகத்தில் குவிந்து விடுகின்றன.
பல்லடம் நகராட்சி நிர்வாகத்தின் மூலம், துாய்மை பணியாளர்கள் குப்பைகள், கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபடுகின்றனர். இருப்பினும், அரசு மருத்துவமனைக்கு என, பிரத்யேகமாக துாய்மை பணியாளர்களை நியமிக்க வேண்டியது அவசியமாகிறது.
காரணம், பல்லடம் நகராட்சி பகுதியில், சேகரமாகும் குப்பைகள், கழிவுகளை தரம் பிரித்து, குப்பை மேலாண்மை மேற்கொள்வதற்கே, கூடுதலாக பணியாளர்கள் தேவைப்படுகின்றனர்.
இவ்வாறு இருக்க, கூடுதல் பொறுப்பாக, அரசு மருத்துவமனையையும் பராமரிக்க வேண்டி உள்ளது. இதனால், நகராட்சியின் அன்றாட பணிகள் பாதிக்கப்படுவது ஒருபுறம் இருக்க, அரசு மருத்துவமனையையும், முறையாக பராமரிக்க முடிவதில்லை.
அரசு மருத்துவமனைக்கு என, பிரத்யேக துாய்மை பணியாளர்கள் நியமிக்கப்படுவதன் மூலம், மருத்துவமனையை சுகாதாரமாக  பராமரிக்க முடியும். குப்பைகள், கழிவுகள் அதிக அளவில் சேர்வதால், மருத்துவமனை வளாகத்திலேயே, நோய் தொற்று பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
எனவே, நோயாளிகள், பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, அரசு மருத்துவமனைக்கு என, பிரத்யேக துாய்மை பணியாளர்களை நியமிக்க வேண்டும். இதன் வாயிலாக, நகராட்சி நிர்வாகத்தை எதிர்பார்க்காமல், முழுமையான துாய்மை பணிகளை உடனுக்குடன் மேற்கொள்ள முடியும்.

