/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கரையோர வேலி சேதம்; குழாய் உடைப்பு
/
கரையோர வேலி சேதம்; குழாய் உடைப்பு
ADDED : அக் 03, 2025 10:49 PM

திருப்பூர்:
நொய்யல் கரையில் உள்ள கம்பி வேலியை சேதப்படுத்தியும், பிரதான குழாய் உடைக்கப்பட்டு குடிநீரை வீணாக்கியும், சில விஷமிகள் தொடர்ந்து அட்டகாசத்தில் ஈடுபடுகின்றனர்.
திருப்பூர் மாநகராட்சி பகுதிக்கு மேட்டுப்பாளையம் பகுதியிலிருந்து 2 மற்றும் 4வது குடிநீர் திட்டம் வாயிலாக குடிநீர் வழங்கப்படுகிறது. இத்திட்டங்களின் கீழ் பிரதான குழாய்கள் பதித்து நகரினுள் அமைக்கப்பட்டுள்ள மேல்நிலைத் தொட்டிகளுக்கு குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. அவற்றிலிருந்து பகுதி வாரியாக வீட்டு இணைப்புகளுக்கு குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.
அவ்வகையில், திருப்பூர் வடக்கு பகுதியிலிருந்து தெற்கு பகுதிக்குச் செல்லும் வகையில் பிரதான குழாய்கள் ராயபுரம் பகுதி வழியாக அமைக்கப்பட்டுள்ளது. ராயபுரத்தில் பெத்திச்செட்டிபுரம் பகுதியில் நொய்யல் ஆற்றின் குறுக்கில், இந்த குழாய்கள் கடந்து செல்லும் வகையில் பதிக்கப்பட்டுள்ளது.
இந்த குழாயில் அமைந்துள்ள கரையோரத்தில், குழாயை சேதப்படுத்தி அதிலிருந்து வெளியேறும் குடிநீரில் சில விஷமிகள் குளிப்பது, துணி துவைப்பது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதனால் பெருமளவு குடிநீர் வெளியேறி நொய்யல் ஆற்றில் வீணாகக் கலந்தது. இது குறித்து 'தினமலர்' நாளிதழில் சுட்டிக்காட்டி செய்தி வெளியானது. இதையடுத்து, குழாய் அமைந்துள்ள இடத்தில் கான்கிரீட் கட்டுமானம் ஏற்படுத்தி பாதுகாப்பு செய்யப்பட்டது.
கான்கிரீட் கட்டுமானத்தை சேதப்படுத்த முடியாத நிலையில் இதில் ஈடுபட்ட விஷமிகள் மறு கரையில் சென்று தங்கள் கைவரிசையைத் தொடர்ந்தனர்.
அங்கு பிரதான குழாயை சேதப்படுத்தி, குடிநீர் வெளியேற்றி அதைப் பயன்படுத்தினர். தற்போது அங்கு பிரதான குழாயில் ஓட்டை போட்டு, ேஹாஸ் பைப்பை பொருத்தி அதில் குடிநீரைப் பிடித்து பயன்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்துள்ளனர்.மேலும், இந்த குழாய்கள் ஆற்றினுள் அமைந்துள்ள நிலையில், கரையைக் கடந்து செல்ல வசதியாக, அங்கு அமைக்கப்பட்டுள்ள கம்பி வேலியையும் இந்த நபர்கள் சேதப்படுத்தியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இது போன்ற விஷமத்தனமாக செயல்படும் நபர்களைக் கண்டறிந்து தண்டிக்க வேண்டும்.