/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தென்னை மரங்கள் பாதிப்பு! வேளாண் அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் கொதிப்பு
/
தென்னை மரங்கள் பாதிப்பு! வேளாண் அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் கொதிப்பு
தென்னை மரங்கள் பாதிப்பு! வேளாண் அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் கொதிப்பு
தென்னை மரங்கள் பாதிப்பு! வேளாண் அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் கொதிப்பு
ADDED : நவ 05, 2025 12:19 AM

பல்லடம்: சுல்தான்பேட்டை அருகே, தவறான மருந்து பரிந்துரை செய்ததால், 420 தென்னை மரங்கள் பாதிப்புக்குள்ளானதாக கூறி, இழப்பீடு கேட்டு முற்றுகையிட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.
சுல்தான்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட, கம்மாளப்பட்டியை சேர்ந்தவர் வெங்கடேசன், 52, விவசாயி. இவருக்கு சொந்தமான ஆறு ஏக்கர் நிலத்தில், தென்னை விவசாயம் செய்து வருகிறார். கடந்த, ஆக. மாதம் செஞ்சேரிமலையில் உள்ள உரக்கடை ஒன்றில் தென்னைக்கு தேவையான மருந்துகளை வாங்கி பயன்படுத்தினார்.
இதனையடுத்து, ஓரிரு நாட்களில், தென்னை மரங்களில் இருந்த பூக்கள், பிஞ்சுகள் மற்றும் காய்கள் கருகிய நிலையில் கீழே விழ துவங்கியுள்ளது.
இது தொடர்பாக, வேளாண் மற்றும் தோட்டக்கலைத் துறையில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என்று கூறி, நுாற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் நேற்று, சுல்தான்பேட்டை வேளாண் அலுவலகத்தை முற்றுகையிட்டு கோஷமிட்டனர்.
இதுகுறித்து, விவசாயிகள் கூறுகையில், 'செஞ்சேரிமலையிலுள்ள சம்பந்தப்பட்ட உரக்கடை மீது ஏற்கனவே பல புகார்கள் உள்ளன. அதிகாரிகளின் பரிந்துரையின் பேரில் தான், தென்னைகளுக்கு மருந்து பயன்படுத்தப்பட்டது. இதனையடுத்து, 420 மரங்கள் பாதிக்கப்பட்டு, நஷ்டம் ஏற்பட்டுள்ளது. உரக்கடை உரிமையாளரிடம் இது குறித்து கேட்டால், சரியான பதில் இல்லை. எனவே, தவறான மருந்து வழங்கிய உரக்கடையை பூட்டி சீல் வைப்பதுடன், உரிய இழப்பீடு பெற்றுத்தர வேண்டும்,' என்றனர்.
வேளாண் அதிகாரிகள் கூறுகையில், 'உரிய பரிசோதனையின் அடிப்படையில் தான், மருந்துகள் அனுமதிக்கப்படுகின்றன. பாதிக்கப்பட்ட விவசாயி பயன்படுத்திய மருந்தின் மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
வேளாண் பல்கலை மூலம் இது குறித்து ஆய்வு மேற்கொள்ளவும் பரிந்துரைத்துள்ளோம். பரிசோதனை முடிவுகள் வெளிவந்த பின்பே, மருந்தினால் தான் பாதிப்பு ஏற்பட்டதா? என்பதை உறுதி செய்ய முடியும்.
உரக்கடையை சீல் வைக்கும் அதிகாரம் எங்களுக்கு இல்லை. இழப்பீடு குறித்தும் நாங்கள் நிர்ணயிக்க முடியாது. எனவே, பரிசோதனை முடிவுகள் வந்தபின், இது குறித்து தெரியப்படுத்தப்படும்,' என்றனர்.
அதிகாரிகளின் முடிவை ஏற்காத விவசாயிகள், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். சுல்தான்பேட்டை போலீசார், மறியலில் ஈடுபட முயன்ற, 100க்கும் மேற்பட்ட விவசாயிகளை கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

