/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இந்த வழி வருவதென்றால் மனசில் 'திக்... திக்'
/
இந்த வழி வருவதென்றால் மனசில் 'திக்... திக்'
ADDED : செப் 07, 2025 10:54 PM

திருப்பூர்; திருப்பூர் அருகே வேட்டுவபாளையம் பகுதி மக்கள், சாலை பணி பாதியில் நிற்பதால், மயானம் வழியாக புகுந்து வர வேண்டியுள்ளது என்று பொதுமக்கள் வேதனைப்படுகின்றனர்.
திருப்பூர் ஒன்றியம், மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்டது வேட்டுவபாளையம். அப்பகுதியில் உள்ள மயானம் அருகே இருந்து, அப்பகுதியில் உள்ள தோட்டங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்கு, மண் பாதை உள்ளது.
பல ஆண்டுகளாக மக்கள் பயன்பாட்டில் உள்ள மண் பாதையை தார்ரோடாக மாற்ற, நடவடிக்கை எடுக்கப்பட்டது. கடந்தாண்டு நடந்த விழாவில், அமைச்சர் சாமிநாதன், ரோடு பணிகளை துவக்கி வைத்தார். இருப்பினும், இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அப்பணி கிடப்பில் போடப்பட்டது.
தார்ரோடு பணி பெரும்பாலான இடத்தில் நடந்துள்ளது; மயானம் அருகே உள்ள வேட்டுவபாளையம் - புக்குளிபாளையம் ரோட்டில் இருந்து இணைக்கப்படவில்லை. மயானத்தின் மேற்கு பகுதியில் நேராக சென்று கொண்டிருந்த ரோடு மறிக்கப்பட்டுள்ளது.இதன்காரணமாக, அப்பகுதி மக்கள், மயானத்துக்குள் சென்று, மற்ற பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
பொதுமக்கள் கூறுகையில், 'தார்ரோடு பணிகளை, ஊரக வளர்ச்சித்துறையினர் ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். கோர்ட் வழக்கு ஏதாவது இருந்தாலும், சுமூக தீர்வு ஏற்படுத்த வேண்டும்.
பொதுமக்கள், இரவு நேரம் மயானத்துக்குள் புகுந்து சென்று வருவதால், அச்சமாக இருக்கிறது; அமைச்சர் துவக்கி வைத்த பணியை விரைந்து முடிக்க, மாவட்ட நிர்வாகமும் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்,' என்றனர்.