/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நுாலகம் பஸ் ஸ்டாப்பில் நெரிசல்; திணறும் ஓட்டுநர்கள், மக்கள்
/
நுாலகம் பஸ் ஸ்டாப்பில் நெரிசல்; திணறும் ஓட்டுநர்கள், மக்கள்
நுாலகம் பஸ் ஸ்டாப்பில் நெரிசல்; திணறும் ஓட்டுநர்கள், மக்கள்
நுாலகம் பஸ் ஸ்டாப்பில் நெரிசல்; திணறும் ஓட்டுநர்கள், மக்கள்
ADDED : செப் 03, 2025 11:06 PM
உடுமலை; தளி ரோடு நுாலகம் பஸ் ஸ்டாப்பில், நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காண வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
உடுமலை தளி ரோடு குட்டைத்திடல் நுாலகம் அருகே, பஸ் ஸ்டாப் உள்ளது. பஸ் ஸ்டாண்டில் இருந்து, திருமூர்த்திமலை, அமராவதி நகர், கேரள மாநிலம் மறையூர், மூணார் உட்பட பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படும் பஸ்கள், இந்த பஸ் ஸ்டாப்பில் நின்று பயணியரை ஏற்றிச்செல்கின்றன.
அதே போல், எதிரே வரும் டவுன் மற்றும் புறநகர் பஸ்கள் இங்கு நின்று செல்கின்றன. மேலும், சுற்றுலா வாகனங்கள், லாரிகள், வேன், கார் உள்ளிட்ட அதிகளவு வாகனங்கள் பயன்படுத்தும் பிரதான ரோடாக உள்ளது.
இங்கு,உடுமலை தாலுகா அலுவலகம், போலீஸ் ஸ்டேஷன், சார்பதிவாளர் அலுவலகம், அரசு மருத்துவமனை உட்பட இடங்களுக்கு செல்பவர்கள், இந்த பஸ் ஸ்டாப்பில் இறங்குகின்றனர். அங்கு நால்ரோடு சந்திப்பும் உள்ளதால், போக்குவரத்து நெரிசல் அதிகளவு இருக்கும்.
இந்நிலையில், பஸ் ஸ்டாப் பகுதியில், இருபுறங்களிலும், பஸ்கள் நிறுத்தும் போது, நால்ரோடு சந்திப்பில் பிற வாகனங்கள் செல்ல முடிவதில்லை. இதனால், நெரிசல் அதிகரித்து போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது.
அரசு மருத்துவமனைக்கு அவசர சிகிச்சைக்காக செல்லும் ஆம்புலன்ஸ்களும் செல்ல முடியாத நிலை உள்ளது.
முக்கிய ரோட்டில், ஏற்படும் நெரிசல், நகர போக்குவரத்தில், பல்வேறு பிரச்னைகளுக்கு காரணமாகிறது.
எனவே, நுாலகம் பஸ் ஸ்டாப்பில், பஸ்கள் நிறுத்தும் இடம் குறித்து, போக்குவரத்து போலீசார், நகராட்சி நிர்வாகம், நெடுஞ்சாலைத்துறையினர் இணைந்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், அரசு அலுவலகங்கள் உள்ள கச்சேரி வீதியில் நிலவும் நெரிசலுக்கும், தீர்வு காண வேண்டும்.