ADDED : ஜன 19, 2024 04:24 AM
திருப்பூர்: திருப்பூர் - அவிநாசி ரோடு, குமார் நகரில் உள்ள மின்வாரிய கோட்ட அலுவலகத்தில், மின்நுகர்வோர் குறைகேட்பு கூட்டம் நேற்று நடைபெற்றது.
கூட்டத்துக்கு மின்வாரிய செயற்பொறியாளர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார்.
சமூக ஆர்வலர்கள், மின் நுகர்வோர் பங்கேற்று, மின் வாரியம் சார்ந்த பிரச்னைகளை குறிப்பிட்டு மனு அளித்தனர். முகாமில், மொத்தம் எட்டு மனுக்கள் பெறப்பட்டன.
நஞ்சராயன் குளம் பாதுகாப்பு இயக்க தலைவர் கிருஷ்ணசாமி, எஸ்.பெரியபாளையத்தில், முறைகேடாக விவசாய இணைப்பு வழங்கிய மின்வாரிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்தார்.
மின்வாரிய பொது ஒப்பந்த தொழிலாளர் முன்னேற்ற கூட்டமைப்பு மாநில இணை பொதுச்செயலாளர் சரவணன் அளித்த மனு:
திருப்பூர் பகுதி மின்நுகர்வோர் சந்தித்துவரும் பிரச்னைகள் குறித்து தொடர்ந்து மனு அளித்தும், எந்த ஒரு மனு மீதும் உரிய விசாரணை நடத்தி, பதில் அளிப்பது இல்லை.
ஊத்துக்குளி மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அனுப்பியுள்ள விசாரணை அழைப்பு கடிதத்தில், முறையான தகவல்கள் ஏதும் இடம்பெறவில்லை. எனவே, வரும் 20ம் தேதி நடைபெறுவதாக கடிதத்தில் குறிப்பிட்டுள்ள விசாரணையை, வேறு தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

