/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பருத்தி நுால் விலை கிலோவுக்கு ரூ.10 உயர்வு
/
பருத்தி நுால் விலை கிலோவுக்கு ரூ.10 உயர்வு
ADDED : மார் 05, 2024 12:58 AM

திருப்பூர்;சர்வதேச சந்தையில், பஞ்சு விலை திடீரென உயர துவங்கியுள்ளதால், ஒசைரி நுால்விலை கிலோவுக்கு, 10 ரூபாய் உயர்ந்துள்ளது.
இந்திய பருத்தி கழகத்தின் கணிப்பின்படி, பஞ்சு வரத்து சீராக இருந்து வந்தது. கடந்த மாதங்களில், தினசரி வரத்து 1.90 லட்சம் பேல்களாக இருந்தது. தற்போது, 1.20 லட்சம் 'பேல்'களாக குறைந்துவிட்டது.
சர்வதேச அளவில், இந்திய மார்க்கெட்டை காட்டிலும், பஞ்சுவிலை குறைவாக இருந்தது; சமீபமாக, வெளிநாடுகளில் பஞ்சு விலை உயர்ந்து கொண்டிருக்கிறது. இதன்காரணமாக, இந்தியாவிலும் பஞ்சு விலை உயர வாய்ப்புள்ளதாக கருதி, பஞ்சு வணிகர்களும், விவசாயிகளும் விற்பனைக்கு கொண்டு வராமல் காத்திருக்கின்றனர்.
திடீரென வரத்து குறைந்ததால், ஒரு கேண்டி பஞ்சு விலை, 56 ஆயிரம் முதல், 57 ஆயிரம் ரூபாய் வரை இருந்தது, தற்போது, 62 ஆயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளது. தற்காலிகமான விலை உயர்வாக இருந்தால், வரும் வாரங்கிளல் விலை குறையும். இதே விலை தொடரவும் வாய்ப்புள்ளதால், நுால்விலையில், கிலோவுக்கு, 10 ரூபாய் உயர்ந்துள்ளது.
நேற்றைய நிலவரப்படி, கோம்டு ரகம் (வரி நீங்கலாக), 16 ம் நம்பர் - 260 ரூபாய், 20ம் நம்பர் - 263, 24ம் நம்பர் - 268; 30ம் நம்பர் - 278, 34ம் நம்பர் - 286, 40ம் நம்பர் 304 ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
'செமி கோம்டு' ரகம் :16 ம் நம்பர் - 250 ரூபாய், 20ம் நம்பர் - 253, 24 ம் நம்பர் - 258, 30ம் நம்பர் 268; 34 ம் நம்பர் - 276, 34 ம் நம்பர் - 294 ரூபாய் என்று விலையில் விற்கப்படுகிறது.
நுாற்பாலை உரிமையாளர்கள் சிலர் கூறியதாவது:
சர்வதேச மார்க்கெட்டில், பஞ்சு விலை திடீரென ஏற்றமடைந்து வருகிறது; 30 சதவீதம் வரை விலை உயர்ந்துள்ளது. இந்தியாவிலும், 12 சதவீதம் வரை விலை உயர்ந்துள்ளது. கூடுதல் விலை கிடைக்கும் என்று நம்பி, விவசாயிகளும், வியாபாரிகளும், பஞ்சை இருப்பு வைக்க துவங்கிவிட்டனர்.
பஞ்சு விலைஉயர்வால், நுால் விலை கிலோவுக்கு 10 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. வரத்து குறைந்தால், பஞ்சு விலை மேலும் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

