மழை வந்தால் பாதிப்பு... மக்கள் தவிப்பு: தேவை ஒரு நிரந்தர தீர்வு
மழை வந்தால் பாதிப்பு... மக்கள் தவிப்பு: தேவை ஒரு நிரந்தர தீர்வு
UPDATED : நவ 10, 2026 09:50 AM
ADDED : நவ 10, 2026 09:47 AM

திருப்பூர்: நகர்ப்புறங்களில் கனமழை காலங்களில் பெருவெள்ளம் மற்றும் மழைநீர் தேங்கும் பகுதிகள் கண்டறியப்பட்ட போதிலும், அங்கு உரிய கட்டமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழகம் முழுதும் பரவலாக பெய்து வரும் வடகிழக்கு பருவமழை, திருப்பூர் மாவட்டத்திலும் பெய்து வருகிறது. மழையின் போது, ஆங்காங்கே சாலைகளில் வெள்ளம் தேங்குவதும், சில இடங்களில் வீடுகளுக்குள் மழைநீர் புகுவதும் தொடர் பாதிப்புகளாக இருந்து வருகின்றன.
இருப்பினும், தீயணைப்புத்துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி முகமை மற்றும் பொதுப்பணித்துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில், மழைக்காலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகிறது.
திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை, மழைக்காலத்தில் குளம், குட்டைகள் மற்றும் நீர்நிலைகளில் சிறுவர்கள், பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்கள் விளையாட சென்று, தவறி விழுவதுதான் பிரதான பேரிடர் அச்சுறுத்தலாக உள்ளது. இதனால், ‘நீர் நிலைகளின் அருகே விளையாடச் செல்லக் கூடாது’ என, ஊராட்சி நிர்வாகங்கள் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இருப்பினும், ‘ஆபத்தான குளம், குட்டைகளின் அருகே எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட வேண்டும்’ என சில ஆண்டுகளாக உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டும், பெரும்பாலான ஊராட்சிகள் இன்னும் செயல்படுத்தவில்லை.
திருப்பூர் மாநகர பகுதிகளில், காலேஜ் ரோடு ரயில்வே பாலம், பி.என். ரோடு, அவிநாசி – சேவூர் ரோடு உள்ளிட்ட பல இடங்களில், சில நிமிடங்கள் மழை பெய்தாலே மழைநீர் குளம்போல் தேங்குகிறது. ‘தாழ்வான பகுதிகளாக இருப்பதால், நீர் தேங்குவதாகவும், மழை நின்ற சில நிமிடங்களில் அது வடிந்துவிடும்’ என்றும் சம்பந்தப்பட்ட துறையினர் கூறுகின்றனர்.
‘இருப்பினும், ஒவ்வொரு மழைக்காலத்திலும் ஏற்படும் இப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், நிரந்தர தீர்வு காண வேண்டும்’ என்ற கோரிக்கை பொதுமக்களிடையே வலுத்துள்ளது.
