/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அரசு பள்ளிகளில் சேதமடைந்த ஓட்டுக்கட்டடங்கள்; கல்வித்துறை நடவடிக்கை எடுக்குமா?
/
அரசு பள்ளிகளில் சேதமடைந்த ஓட்டுக்கட்டடங்கள்; கல்வித்துறை நடவடிக்கை எடுக்குமா?
அரசு பள்ளிகளில் சேதமடைந்த ஓட்டுக்கட்டடங்கள்; கல்வித்துறை நடவடிக்கை எடுக்குமா?
அரசு பள்ளிகளில் சேதமடைந்த ஓட்டுக்கட்டடங்கள்; கல்வித்துறை நடவடிக்கை எடுக்குமா?
ADDED : அக் 14, 2024 08:16 PM

உடுமலை : அரசுப்பள்ளிகளில் ஓட்டு கட்டடங்களாக இருக்கும் மேற்கூரைகளை, சிமென்ட் தளமாக மாற்றுவதற்கு கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
அரசு பள்ளிகளில், மிகவும் பழமையான கட்டமைப்புகளில், வகுப்பறைகளின் மேற்கூரைகள் ஓட்டு கூரைகளாகதான் உள்ளன. வகுப்பறை கட்டடங்கள் தரமாகவும், உறுதியாக இருப்பினும், மேற்கூரையின் ஓடுகள் மிக விரைவில் பழுதடைந்தும், சிதிலமடைந்தும் விடுகின்றன.
இதனால் ஓடுகளில் விரிசல் ஏற்பட்டு மேற்கூரை பாதிக்கப்படுகிறது. விரிசல் விழுந்த மேற்கூரையால், மழை நாட்களில் மழைநீர் வகுப்பறைகளில் ஒழுகுவது, ஓடுகள் துகள்களாக சரிந்து விழுவது போன்ற பிரச்னைகள் ஏற்படுகிறது.
உடுமலை ஒன்றியம் மலையாண்டிகவுண்டனுார் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். பள்ளி வளாகம் முழுவதும் போதுமான அளவு வகுப்பறைகள், பழமையான வகுப்பறை கட்டமைப்புகள், சுகாதாரமான வளாகம் உள்ளது.
ஆனால் இரண்டு கட்டடங்களில் ஒன்றில் ஓடுகள் மிகவும் சேதமாகியுள்ளன. இதனால், மழை நாட்களில் தொடர்ந்து மழைநீர் வகுப்பறைக்குள் புகுந்துவிடுகிறது. மேற்கூரைகள் சிமென்ட் கூரைகளாக மாற்ற வேண்டுமென பெற்றோர் தொடர்ந்து வலியுறுத்துகின்றனர்.
இதுகுறித்து பெற்றோர் கூறியதாவது:
பள்ளியில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் அனைத்தும் உள்ளது. ஆனால் மழைநாட்களில் குழந்தைகள் வகுப்பறைகள் அமர முடியாத நிலையில், மழைநீர் ஓடுகளின் வழியாக உள்ளே தேங்குகிறது.
இதனால் பள்ளி நிர்வாகத்தினரும் சிரமப்படுகின்றனர். பல ஆண்டுகளாக இப்பிரச்னை தொடர்கிறது. ஓடுகள் மாற்றப்பட்டாலும் மீண்டும் சிறிது நாட்களில் இப்பிரச்னை ஏற்படுகிறது. கல்வித்துறைதான் இதற்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும்.
குழந்தைகள் பாதுகாப்பாக பள்ளிக்கு சென்றுவரும் வகையில், தரமான மேற்கூரை அமைப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, கூறினர்.
இப்பள்ளி மட்டுமின்றி, பழமையான கட்டடங்கள் உள்ள பள்ளிகளில் ஓட்டு மேற்கூரைகள் அடிக்கடி மாற்ற வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இந்நிலையை மாற்றுவதற்கு கல்வித்துறை அதிகாரிகள், பள்ளிகளில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், உள்ளாட்சி நிர்வாகமும் கிராமப்பகுதி பள்ளிகளுக்கான அடிப்படை தேவைகள் பெற்று தருவதில் அக்கறை காட்ட வேண்டுமென கல்வி ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.