/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'திரிசங்கு' நிலையில் அணைப்பாளையம் பாலம்
/
'திரிசங்கு' நிலையில் அணைப்பாளையம் பாலம்
ADDED : ஜன 02, 2026 05:40 AM

திருப்பூர்: முந்தைய தி.மு.க. ஆட்சியின் போது, அடிக்கல் நாட்டி துவங்கிய அணைப்பாளையம் பாலம், தற்போதைய ஆட்சிக் காலம் முடிவதற்குள் கட்டி முடித்து திறக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மங்கலம் ரோட்டையும், காலேஜ் ரோட்டையும் இணைக்கும் வகையில் அணைப்பாளையம் பகுதியில், நொய்யல் ஆறு, ரயில்வே ஒற்றைக் கண் பாலம் ஆகியவற்றை கடந்து தான் செல்ல வேண்டும். மழை காலங்களில் இவ்விரு பாலங்களும் பயன்படுத்த முடியாத நிலை நிலவும். வாகனங்கள் நீண்டதுாரம் சுற்றிக் கொண்டு செல்லும் நிலை இருந்தது.
இதற்கு தீர்வுகாணும் வகையிலும், ஆண்டிபாளையம் - சிறுபூலுவபட்டி - வேலம்பாளையம் ரிங் ரோட்டை முழுமைப்படுத்தும் வகையிலும், இப்பகுதியில் உயர்மட்டப் பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது. 2008ல், தி.மு.க. ஆட்சியில், சாமிநாதன் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருந்த போது, அடிக்கல் நாட்டினார். மொத்தம், 6.5 கோடி ரூபாய் மதிப்பில் திட்டமிடப்பட்டு பணி துவங்கியது.
நடைமுறைச்சிக்கல், வழக்கு போன்ற காரணங்களால் இப்பாலம் கட்டுமானப் பணி பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டது. இடைப்பட்ட காலத்தில் ரயில்வே துறை, தனது இடத்தில் பாலத்தை கட்டி முடித்தது. நீண்ட இழுபறிக்குப்பின், 2023ம் ஆண்டில், மீண்டும் கட்டுமான பணி துவங்கியது.
பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படுத்திய பின், பாலம் கட்டுமானப் பணி வேகம் பிடித்தது. தற்போது, 90 சதவீதத்துக்கும் மேல் பணி முடிவடைந்துள்ள நிலையில், மாதக்கணக்கில் பணிகள் தொடர்ந்து நடக்காமல் மந்த கதியில் உள்ளது.
பாலம் துவங்கும் மற்றும் முடிவடையும் இடத்தில் பாதாள சாக்கடை, பிரதான குடிநீர் குழாய் மற்றும் கழிவு நீர் கால்வாய் ஆகிய பணிகள் கிடப்பில் போட்டுக் கிடக்கும் நிலையில் பாலம் கட்டுமானப் பணி தொடர்ந்து மேற்கொள்ள முடியாத வகையில் இடையூறு ஏற்பட்டுள்ளன.
முந்தைய தி.மு.க. ஆட்சியில் 17 ஆண்டு முன்னர் துவங்கிய இப்பணியை, சில மாதங்களில் முடித்து விடும் திட்டத்தில் களம் இறங்கிய அதிகாரிகள் தற்போது திகைத்துப் போய் நிற்கின்றனர்.
தமிழக சட்டமன்ற தேர்தல், இன்னும் மூன்று மாதத்தில் நடக்கவுள்ள நிலையில், இப்பாலத்தை கட்டி முடித்து திறந்து விடும் எண்ணத்தில் ஆளும் கட்சி நிர்வாகிகள் உள்ளனர். ஆனால், தற்போதைய நிலையில், பாலம் கட்டுமான பணி முடியுமா என்பது சந்தேகமே.

