/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குப்பை சேகரிக்க 15 ஆயிரம் ஆட்டோ வாங்க முடிவு
/
குப்பை சேகரிக்க 15 ஆயிரம் ஆட்டோ வாங்க முடிவு
ADDED : செப் 20, 2025 08:01 AM
திருப்பூர்; நகர்ப்புறங்களை ஒட்டியுள்ள கிராம ஊராட்சிகளில் மக்கள் தொகை, குடியிருப்புகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. அதேநேரம், குடியிருப்புகள், வணிக நிறுவனங்களில் இருந்து வெளியேறும் குப்பை, கழிவின் அளவும் அதிகரித்து வருகிறது.
சேகரமாகும் குப்பைகளை மட்கும் மற்றும் மக்காத குப்பைகளாக தரம் பிரித்து, மக்கும் குப்பையில் இருந்து உரம், மக்காத குப்பையை மறுசுழற்சிக்கு அனுப்பி வைக்கும், திடக்கழிவு மேலாண்மை பணி மேற்கொள்ள வேண்டும் என்பது, மத்திய ஊரக வளர்ச்சித்துறை அறிவுறுத்தி, அதற்கான வழிகாட்டுதலும் வழங்கியுள்ளது.
ஆனால், ஊராட்சிகளில் துாய்மைப்பணியாளர் வாயிலாக, வீடுவீடாக குப்பை சேகரிக்கப்பட்டாலும், அவற்றை கொட்டுவதற்கு இடமில்லை; அவை, திறந்தவெளியில் கொட்டப்பட்டு எரியூட்டப்படுகின்றன. அத்துடன், குப்பையை தரம் பிரிக்கும் பணியை மேற்கொள்ள போதிய பணியாளர்களும் இல்லை.
ஊரகப்பகுதிகளில், வீடுகளில் இருந்து வெளியேறும் குப்பையை, தரம் பிரித்து சேகரிக்க, 15 ஆயிரம் மின் ஆட்டோக்கள் வாங்க, ஊரக வளர்ச்சி துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஊராட்சி நிர்வாகத்தினர் கூறுகையில், 'சேகரிக்கும் குப்பையை அப்புறப்படுத்த, திடக்கழிவு மேலாண்மை செய்வதற்குரிய கட்டமைப்பை முதலில் ஏற்படுத்த வேண்டும்; தற்போதுள்ள பேட்டரி வாகனங்களை ஓட்டுவதற்கே, ஓட்டுனர்கள் இல்லை. எனவே, ஊராட்சிகளில் மக்கள் தொகைக்கேற்ப, குப்பையை மேலாண்மை செய்வதற்குரிய உட்கட்டமைப்பை பலப்படுத்த வேண்டும்,' என்றனர்.