/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கொண்டைக்கடலை சாகுபடி பரப்பு சரிவு; தொடர் நஷ்டத்தால் மாற்றம்
/
கொண்டைக்கடலை சாகுபடி பரப்பு சரிவு; தொடர் நஷ்டத்தால் மாற்றம்
கொண்டைக்கடலை சாகுபடி பரப்பு சரிவு; தொடர் நஷ்டத்தால் மாற்றம்
கொண்டைக்கடலை சாகுபடி பரப்பு சரிவு; தொடர் நஷ்டத்தால் மாற்றம்
ADDED : நவ 18, 2024 10:31 PM

உடுமலை ; விதைக்கடலை விலை உயர்வு மற்றும் அறுவடை சீசனில் விலை வீழ்ச்சி உள்ளிட்ட காரணங்களால், உடுமலை, குடிமங்கலம் வட்டாரங்களில், கொண்டைக்கடலை சாகுபடி பரப்பு ஆண்டுதோறும் குறைந்து வருகிறது.
உடுமலை, குடிமங்கலம் வட்டாரங்களில், வடகிழக்கு பருவமழை சீசனுக்கு பிரத்யேக சாகுபடியாக கொண்டைக்கடலை இருந்தது. கணபதிபாளையம், அந்தியூர், வெனசப்பட்டி, பொட்டையம்பாளையம், கொங்கல்நகரம், வல்லக்குண்டாபுரம், விருகல்பட்டி, புதுப்பாளையம், சிந்திலுப்பு மற்றும் சுற்றுப்பகுதிகளில், 20 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமாக இச்சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வந்தது.
சுண்டல், கடலை மாவு தயாரிப்பு என உணவு சார்ந்த தேவைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருவதால், கொண்டைக்கடலைக்கு முன்பு தேவையும் அதிகளவு இருந்தது.
விதைப்பு சீசன்
வடகிழக்கு பருவமழை துவங்கியதும், விளைநிலத்தை தயார் செய்து, கொண்டைக்கடலை விதைப்பு செய்கின்றனர்; செடியின் வளர்ச்சி தருணத்தில், மழைக்கு பிறகு பனிப்பொழிவு என சீதோஷ்ண நிலை சரியாக இருந்தால், ஏக்கருக்கு, 800 கிலோ வரை கொண்டைக்கடலை விளைச்சல் இருக்கும்.
களிமண் நிலங்களில் மட்டுமே, இச்சாகுபடியை மேற்கொள்ள முடியும் என்பதால், உடுமலை, குடிமங்கலம் வட்டாரத்தில் பிரத்யேக சாகுபடியாக கொண்டைக்கடலை இருந்தது.
விலை வீழ்ச்சி
கடந்த சில ஆண்டுகளாக கொண்டைக்கடலை சாகுபடியை கைவிட்டு, மாற்றுச்சாகுபடிக்கு செல்லத்துவங்கி விட்டனர். இதற்கு அறுவடையின் போது ஏற்படும் விலை வீழ்ச்சி முக்கிய காரணமாகியுள்ளது.
தற்போது சீசன் துவங்கியுள்ள நிலையில், விதை கடலை, கிலோ, 80 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஆனால், அறுவடையின் போது குறைந்து விடுகிறது.
மேலும், சீதோஷ்ண நிலை மாற்றத்தால், செடிகளில் புழுத்தாக்குதல் அதிகரித்து, நான்கு முறை மருந்து தெளிக்கின்றனர்; களையெடுத்தல் மற்றும் அறுவடை பணிகளுக்கும், செலவு அதிகரித்து விட்டது. விளைச்சலும், 300 கிலோ என்றளவில் குறைந்து விடுகிறது.
விவசாயிகள் கூறியதாவது: பிரத்யேகமாக சாகுபடி செய்யப்பட்ட கொண்டைக்கடலையை தொடர் நஷ்டத்தால், கைவிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
அறுவடையின் போது, அரசு நேரடியாக கொண்டைக்கடலையை கொள்முதல் செய்தால், விலை வீழ்ச்சியை தவிர்க்க முடியும். இதே நிலை நீடித்தால், இச்சாகுபடி முற்றிலுமாக காணாமல் போகும் வாய்ப்புள்ளது.
இவ்வாறு, தெரிவித்தனர்.