ADDED : டிச 13, 2024 10:57 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; திருப்பூர் சுற்றுவட்டார பகுதியில், தொடர் துாறல் மழை பெய்து வருகிறது. தோட்டங்களில் காய்கறி, கீரை, பழங்களை பறித்து சந்தைக்கு கொண்டு வருவதில் நடைமுறை சிக்கல்கள் எழுந்துள்ளது.
வழக்கமாக, திருப்பூர், பல்லடம் ரோட்டில் உள்ள தெற்கு உழவர் சந்தைக்கு கண்டியன் கோவில், பொங்கலுார், சம்மந்தம்பாளையம், பெருந்தொழுவு, கணபதிபாளையம், உகாயனுார், பல்லடம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, 60 முதல், 80 டன் காய்கறி, தக்காளி சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வரப்படும்.
தொடர் மழை காரணமாக நேற்று, 55 டன் காய்கறி மட்டுமே வந்தது. தக்காளி வரத்து சற்று குறைந்த போதும், வாடிக்கையாளர் வருகை குறைவு என்பதால், கிலோ, 26 ரூபாய்க்கு விற்றது.
வரத்து இன்றும் குறைந்தால், ஓரிரு நாளில் விலை மாறுபாடு இருக்கும் என உழவர் சந்தை அதிகாரிகள் தெரிவித்தனர்.

