ADDED : ஜூலை 04, 2025 12:39 AM
திருப்பூர்; 'திருப்பூர் மாவட்டத்தில் தெரு நாய்களால் கடிபட்டு இறந்த கால்நடைகளுக்கு இழுப்பீடு வழங்கும் அரசு அறிவிப்பில், இழுபறி தென்படுகிறது' என, விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில், காங்கயம், தாராபுரம், ஊத்துக்குளி, ஈரோடு மாவட்டம் சென்னிமலை உள்ளிட்ட இடங்களில், தெருநாய்களால் கடிபட்டு, ஆடு உள்ளிட்ட கால்நடைகள் பலியாவது, தொடர்ந்து நடந்து வருகிறது. இறக்கும் கால்நடைகளுக்கு இழப்பீடு கேட்டு, விவசாயிகள் நடத்திய தொடர் போராட்டத்தின் விளைவாக, மாநில அரசு இழப்பீடு அறிவித்தது.அந்தந்த பகுதி வருவாய்த்துறையினர் வாயிலாக, இறந்த கால்நடைகள், அவற்றின் உரிமையாளர்கள் விவரம் சேகரிக்கப்பட்டு, இழப்பீடு கொடுக்கும் பணி நடந்து வருகிறது. இருப்பினும், இழப்பீடு வழங்கும் பணியில் தொய்வு தென்படுகிறது என, விவசாயிகள் கூறுகின்றனர்.
விவசாயிகள் கூறியதாவது:
தெருநாய்களல் கால்நடைகளுக்கு ஏற்படும் பாதிப்பை அரசு நன்கு உணர்ந்தும், அவற்றை கட்டுப்படுத்த பெரியளவிலான முயற்சியை எடுக்கவில்லை. தினம், தினம் நாய்களால், கால்நடைகள் பலியாவது தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் இழப்பீடு வழங்கப்படும் என்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். இழப்பீடு அறிவிக்கப்பட்ட துவக்க நாட்களில் சரியான முறையில் இழப்பீடு வழங்கப்பட்ட நிலையில், தற்போது, தொய்வு தென்படுகிறது. எனவே, மீண்டும் விவசாயிகள் போராட்டக்களம் குதிப்பதை தவிர்க்க, இழப்பீடும் வழங்குவதில் உள்ள குறைபாடுகளை களைவதில் கவனம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.