/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அத்திக்கடவு - அவிநாசி திட்டத்துக்கு நிலம் இழப்பீடு தொகை வழங்குவதில் இழுபறி; நிபந்தனைகளை ஏற்க விவசாயிகள் தயக்கம்
/
அத்திக்கடவு - அவிநாசி திட்டத்துக்கு நிலம் இழப்பீடு தொகை வழங்குவதில் இழுபறி; நிபந்தனைகளை ஏற்க விவசாயிகள் தயக்கம்
அத்திக்கடவு - அவிநாசி திட்டத்துக்கு நிலம் இழப்பீடு தொகை வழங்குவதில் இழுபறி; நிபந்தனைகளை ஏற்க விவசாயிகள் தயக்கம்
அத்திக்கடவு - அவிநாசி திட்டத்துக்கு நிலம் இழப்பீடு தொகை வழங்குவதில் இழுபறி; நிபந்தனைகளை ஏற்க விவசாயிகள் தயக்கம்
ADDED : செப் 18, 2025 12:22 AM
திருப்பூர்; அத்திக்கடவு - அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டத்தில், குழாய் பதிப்பதற்காக நிலம் கொடுத்தவர்களுக்கு இழப்பீடு தொகை வழங்குவதில் இழுபறி நீடிக்கிறது. 'அரசின் நிபந்தனைகளை தளர்த்த வேண்டும்' என, விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களை உள்ளடக்கி, அத்திக்கடவு - அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இத்திட்டத்தின் கீழ், 1,045 குளம், குட்டைகளுக்கு நீர் செறிவூட்டப்படுகிறது. இத்திட்டத்துக்கென குழாய் பதிக்க விவசாயிகள் மற்றும் தனியாரின் நிலங்கள் பெறப்பட்டன. பெறப்பட்ட நிலங்களுக்கு மதிப்பீடு நிர்ணயித்து, இழப்பீடு வழங்குவதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.
கடந்த, இரு ஆண்டுக்கு முன்பே நிலம் பெறப்பட்டு, குழாய் பதிக்கும் பணி நிறைவு பெற்று, திட்டம் செயல்பாட்டுக்கு வந்துவிட்ட நிலையில், பல இடங்களில், நிலம் வழங்கியவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை. இதுதொடர்பாக, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நிலம் வழங்கியவர்களிடம் பலகட்ட பேச்சு நடத்தப்பட்டு வருகிறது. நேற்றும், திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கார்த்திகேயன் முன்னிலையில் பேச்சு நடந்தது. திருப்பூர் மாவட்டம், ஊத்துக்கு பகுதியில், திட்டத்துக்கு நிலம் கொடுத்தவர்கள் பங்கேற்றனர்.
அத்திக்கடவு - அவிநாசி திட்ட போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் சம்பத்குமார் கூறியதாவது:
அத்திக்கடவு திட்டத்துக்காக பெறப்பட்ட நிலத்துக்கு இழப்பீடு வழங்கும் விவகாரத்தில், 'நிலம் கொடுத்தவர்களின் நிலம், நீண்ட கால குத்தகை அடிப்படையில் பெறப்படும். அத்திக்கடவு குழாய் பதிக்கப்பட்ட இடத்தில், 10 மீ., அளவுக்கு எந்தவொரு பயன்பாடும் இருக்க கூடாது; கட்டுமானம் எழுப்பக்கூடாது. குழாய் பதிக்கப்பட்ட இடத்தில் டிராக்டர் உள்ளிட்ட கனரக வாகனங்கள் எதுவும் செல்லக் கூடாது' என்பது உட்பட, 11 நிபந்தனைகள், வருவாய்த்துறையினரால் முன்வைக்கப்படுகிறது.
இந்த நிபந்தனையால் அந்நிலத்தை விற்க, வாங்க முடியாத நிலை ஏற்படும். விவசாய பயன்பாட்டுக்கு லாரி, டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களை அவ்வப்போது செலுத்துவது தவிர்க்க முடியாதது என்பது போன்ற பல நடைமுறை சிரமங்கள் உள்ளன. எனவே, நடைமுறைக்கு கடினமான நிபந்தனைகளை தளர்த்தி, விவசாயிகள் பாதிக்காத விதிமுறையை வகுத்து, விவசாயிகளிடம் தடையில்லா சான்று மட்டும் பெற்று, நிலத்துக்கான இழப்பீடு தொகையை விடுவிக்க வேண்டும். இதுதொடர்பாக தாலுகா வாரியாக கூட்டம் போட்டு, விவசாயிகளை ஒருங்கிணைக்க வேண்டும் என்பது உட்பட ஆலோசனைகளை வழங்கியுள்ளோம். இந்த யோசனையை, அரசின் பரிசீலனைக்கு கொண்டு செல்வதாக அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.
இவ்வாறு, அவர் கூறினார்.