/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அமராவதி அணையில் நீர் இருப்பு சரிவு; வெளியேற்றத்தால் குடிநீர் தேவைக்கு சிக்கல்
/
அமராவதி அணையில் நீர் இருப்பு சரிவு; வெளியேற்றத்தால் குடிநீர் தேவைக்கு சிக்கல்
அமராவதி அணையில் நீர் இருப்பு சரிவு; வெளியேற்றத்தால் குடிநீர் தேவைக்கு சிக்கல்
அமராவதி அணையில் நீர் இருப்பு சரிவு; வெளியேற்றத்தால் குடிநீர் தேவைக்கு சிக்கல்
ADDED : மார் 08, 2024 12:22 PM

உடுமலை;உடுமலை அருகேயுள்ள அமராவதி அணையிலிருந்து பாசனத்திற்கு தொடர்ந்து நீர் வழங்கப்படுவதால், அணை நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.
உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை வாயிலாக, திருப்பூர், கரூர் மாவட்டத்திலுள்ள, 54 ஆயிரத்து, 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
கடந்தாண்டு, தென் மேற்கு பருவ மழை ஏமாற்றியதால், அணைக்கு நீர்வரத்து குறைத்து, பாசன நிலங்களுக்கு உயிர்த்தண்ணீர் மட்டும் திறக்கப்பட்டது.
இந்நிலையில், வட கிழக்கு பருவ மழை காலத்தில், இறுதியில் பெய்த கன மழை காரணமாக, அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.
கடந்த, ஜன., 9 ம் தேதி அணை நிரம்பியது. தொடர்ந்து, விவசாயிகள் கோரிக்கை அடிப்படையில், ஜன., 25 முதல், மார்ச், 15 வரை, 50 நாட்கள் பாசனத்திற்கு நீர் திறக்க அரசு உத்தரவிட்டது.
அதன் அடிப்படையில், ஆற்று மதகு வழியாக, ராமகுளம் முதல், கரூர் வலது கரை பாசன கால்வாய் வரை, 18 வாய்க்கால் பாசன நிலங்களுக்கு நீர் வழங்கப்பட்டு வருகிறது.
அதே போல், புதிய ஆயக்கட்டு பாசனத்திலுள்ள, 25,250 ஏக்கர் நிலங்களுக்கு, அமராவதி பிரதான கால்வாய் வழியாக நீர் வழங்கப்பட்டு வருகிறது.
அணையிலிருந்து தொடர்ந்து நீர் வழங்கப்பட்டு வருவதால், அணை நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. நீர் திறக்கப்படும் போது, அணை நீர்மட்டம் மொத்தமுள்ள, 90 அடியில், 89.57 அடியாகவும், நீர் இருப்பு, மொத்த கொள்ளளவான, 4,047 மில்லியன் கனஅடியில், 4,008.23 மில்லியன் கனஅடியாகவும் இருந்தது.
நேற்று காலை நிலவரப்படி, அணை நீர்மட்டம், 64.77 அடியாகவும், நீர் இருப்பு, 2,030.85 மில்லியன் கனஅடியாகவும் இருந்தது. அணைக்கு நீர்வரத்து, வினாடிக்கு, 35 கனஅடியாகவும், வெளியேற்றம், 490 கனஅடியாகவும் இருந்தது.
பாசனத்திற்கு நீர் திறக்கப்படுவதால், நேற்று வரை, 24.8 அடி நீர்மட்டம் குறைந்துள்ளது. மார்ச் 15 வரை நீர் வழங்க வேண்டியுள்ளது.
இந்நிலையில், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையின்றி, வறட்சி நிலை காணப்படுவதால், அணைக்கு நீர்வரத்தும் சொற்ப அளவே காணப்படுகிறது. இதனால், அணை நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.
தொடர்ந்து பாசன நிலங்களுக்கு நீர் வழங்குவதிலும், குடிநீர் தேவைக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

