/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விபத்துகளை தவிர்க்க மேம்பாட்டு பணி; கிடப்பில் போடப்பட்ட பரிந்துரைகள்
/
விபத்துகளை தவிர்க்க மேம்பாட்டு பணி; கிடப்பில் போடப்பட்ட பரிந்துரைகள்
விபத்துகளை தவிர்க்க மேம்பாட்டு பணி; கிடப்பில் போடப்பட்ட பரிந்துரைகள்
விபத்துகளை தவிர்க்க மேம்பாட்டு பணி; கிடப்பில் போடப்பட்ட பரிந்துரைகள்
ADDED : செப் 26, 2025 09:17 PM
உடுமலை:
உடுமலை பகுதியில், அடிக்கடி விபத்து ஏற்படும் பகுதிகளில், மேம்பாட்டுப்பணிகளை மேற்கொள்ள, சாலை பாதுகாப்பு குழு சார்பில், பல்வேறு பரிந்துரைகள் வழங்கப்பட்டு, நீண்ட காலமாகியும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கோவை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், உடுமலை நகரம் அமைந்துள்ளது. மேலும், பல்லடம், தாராபுரம் மாநில நெடுஞ்சாலைகளும், மாவட்ட முக்கிய ரோடுகளும், நகர போக்குவரத்தில், முக்கிய பங்கு வகிக்கின்றன.
அடிக்கடி விபத்து ஏற்படும் பகுதிகளை கண்டறிந்து மேம்படுத்த, வருவாய்த்துறை, போலீஸ், வட்டார போக்குவரத்து அலுவலகம், நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட துறைகளை ஒருங்கிணைத்து, சாலை பாதுகாப்பு குழு சில ஆண்டுகளுக்கு முன் ஏற்படுத்தப்பட்டது. இக் குழுவினர் உடுமலை பகுதியில், அடிக்கடி விபத்து ஏற்படுத்தும் பகுதிகளை கண்டறிந்து, 'பிளாக் ஸ்பாட்' என பெயரிட்டு, அங்கு மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகளை பரிந்துரைத்தனர்.
இவை தான் பணிகள் நகராட்சி அலுவலகம் அருகேயுள்ள தளி ரோடு மேம்பாலம் நுழைவாயில் பகுதியில், இரண்டு ஆண்டுகளில், விபத்தினால், 3 உயிரிழப்புகள் ஏற்பட்டது.
அங்கு, விபத்தை தவிர்க்க, இடது பக்க தடுப்புச்சுவரை, 30 மீ.,க்கு விரிவுபடுத்த வேண்டும். சுவரில், ஒளி பிரதிபலிப்பான் பொருத்தி, இருபுறமும், 'சோலார் பிளிங்கிரிங் லைட்', அணுகுசாலையில், இடது புறமும் திரும்ப, தேவையான வெள்ளை குறியீடுகள் அமைக்க வேண்டும்.
இதே போல், நகர எல்லையில், தேசிய நெடுஞ்சாலை - கொழுமம் ரோடு சந்திப்பில், வேகத்தடை, தேவையான வெள்ளை குறியீடு அமைத்து, அதில், ஒளி பிரதிபலிப்பான் அமைக்கப்பட வேண்டும்.
விபத்து பகுதி மெதுவாக செல்லவும் என்ற அறிவிப்பு பலகை வைக்கலாம். ரோட்டின் மையத்தில், டிராபிக் 'ஐ லேண்ட்' எனப்படும் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்.
மேலும், உடுமலை - தாராபுரம் மாநில நெடுஞ்சாலையில், சிவசக்திகாலனி கோவில் சந்திப்பு பகுதியில், சாலை விபத்தில், உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது.
அங்கு, தேவையான எச்சரிக்கை குறியீடு அமைத்து, வாகனங்களின் வேகத்தை குறைப்பதால், விபத்து தவிர்க்கப்படும் என கருத்துரு சமர்ப்பிக்கப்பட்டது.
இவ்வாறு, நகரில் அடிக்கடி விபத்து ஏற்படும் பகுதி, விபத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்ட பகுதிகளை கண்டறிந்து, அவற்றை மேம்படுத்தவே, சாலை பாதுகாப்பு குழு ஏற்படுத்தப்பட்டது.
இக்குழுவினர், பல முறை ஆய்வு செய்து, ஒவ்வொரு துறையினர் பரிந்துரைகளை பெற்று, விபத்து பகுதிகளில் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள கருத்துருவும் அரசுக்கு சமர்ப்பித்துள்ளனர்.
ஆனால், உடுமலை நகரிலுள்ள விபத்து பகுதிகளில், பரிந்துரை மற்றும் கருத்துரு அடிப்படையில், எவ்வித பணிகளும் இதுவரை செய்யப்படவில்லை. இதனால், அப்பகுதிகளில் போக்குவரத்து நெரிசலும், விபத்துகள் ஏற்படுவதும் தொடர்கதையாக உள்ளது.
திருப்பூர் மாவட்ட நிர்வாகம், சாலை பாதுகாப்பு குழுவின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும். கருத்துரு மற்றும் பரிந்துரைகளை செயல்படுத்தி, 'விபத்தில்லா நகரம்' என்ற இலக்கை எட்ட தொடர் கண்காணிப்பு செய்வது அவசியமாகும்.