/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மலைவாழ் மக்கள் குடியிருப்புகளுக்கு மண் ரோடு; மாவட்ட கலெக்டரிடம் மனு
/
மலைவாழ் மக்கள் குடியிருப்புகளுக்கு மண் ரோடு; மாவட்ட கலெக்டரிடம் மனு
மலைவாழ் மக்கள் குடியிருப்புகளுக்கு மண் ரோடு; மாவட்ட கலெக்டரிடம் மனு
மலைவாழ் மக்கள் குடியிருப்புகளுக்கு மண் ரோடு; மாவட்ட கலெக்டரிடம் மனு
ADDED : டிச 01, 2024 10:52 PM
உடுமலை; உடுமலை மலைவாழ் மக்கள் குடியிருப்புக்கு, அவசர மருத்துவ தேவைக்காக ஆம்புலன்ஸ்கள் செல்லும் வகையில், மண் பாதை அமைத்து தர வேண்டும் என, மா.கம்யூ., மலைக்கமிட்டி சார்பில் மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.
திருப்பூர் மாவட்ட கலெக்டரிடம், மா.கம்யூ., மலைக்கமிட்டி சார்பில் செயலாளர் செல்வன் வழங்கிய மனு:
ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை வனச்சரகம், குருமலை, குழிப்பட்டி, மாவடப்பு, பூச்சிக்கொட்டாம்பாறை உள்ளிட்ட, 15க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் குடியிருப்பில், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
இங்கு வசிப்போர், மருத்துவம், கல்வி, உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கு, அப்பர் ஆழியார் வழியாக, 60 கி.மீ., துாரம் சுற்றி வர வேண்டியுள்ளது.
அதிலும், அவசர மருத்துவ தேவைக்கு, கர்ப்பிணிகள், குழந்தைகள், முதியவர்களை கரடு, முரடான பாதையில், தொட்டில் கட்டி துாக்கி வர வேண்டியுள்ளது. இதனால், உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சை கிடைக்காமல், உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது.
கடந்த, 20ம் தேதி குருமலை மலைவாழ் மக்கள் குடியிருப்பைச்சேர்ந்த, இரண்டு மாத கர்ப்பிணியான, சுமதிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
வாந்தி, மயக்கம் ஏற்பட்ட நிலையில், அங்கிருந்த இளைஞர்கள் தொட்டில் கட்டி, கரடு, முரடான பாதையில், ஏழு மணி நேரம் துாக்கி வந்து, அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். உடனடி சிகிச்சை கிடைக்காததால், கர்ப்பப்பை வால்வு வெடித்து பாதிப்பு ஏற்பட்டது.
மலைவாழ் மக்கள் குடியிருப்பில் நோய் பாதிப்பு ஏற்படுபவர்களை, குறிப்பிட்ட நேரத்தில் மருத்துவமனையில் சேர்க்க முடியாத நிலையில், பலர் இறக்கும் சம்பவங்களும், இறந்தவர்களை மீண்டும், தொட்டில் கட்டி துாக்கிச்செல்லும் நிலையும் உள்ளது.
எனவே, அவசர மருத்துவ தேவைக்கு ஆம்புலன்ஸ்கள் வரும் வகையிலும், மலைவாழ் மக்கள் குடியிருப்புகளை இணைக்கும் வகையில், வன உரிமை சட்டத்தின் கீழ், திருமூர்த்திமலையிலிருந்து, குருமலை வரை, 5 கி.மீ., துாரம் உள்ள பாரம்பரிய வழிபாதையில், மண் ரோடு அமைத்து தர வேண்டும். இவ்வாறு, அம்மனுவில் தெரிவித்துள்ளனர்.