/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாற்றுத்திறனாளி ஸ்கூட்டர் விவகாரம்; விசாரணைக்குழுவினர் 'கிடுக்கிப்பிடி'
/
மாற்றுத்திறனாளி ஸ்கூட்டர் விவகாரம்; விசாரணைக்குழுவினர் 'கிடுக்கிப்பிடி'
மாற்றுத்திறனாளி ஸ்கூட்டர் விவகாரம்; விசாரணைக்குழுவினர் 'கிடுக்கிப்பிடி'
மாற்றுத்திறனாளி ஸ்கூட்டர் விவகாரம்; விசாரணைக்குழுவினர் 'கிடுக்கிப்பிடி'
ADDED : ஜூன் 06, 2025 06:26 AM

திருப்பூர்; இலவச ஸ்கூட்டர் வழங்கியதில் முறைகேடு புகார் தொடர்பாக, சிறப்பு விசாரணை குழு அதிகாரிகள், திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நேற்று ஆய்வைத் துவக்கினர்.
திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம், மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச ஸ்கூட்டர் வழங்குவதில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளன. இதுகுறித்து, நம் நாளிதழில் தொடர்ந்து செய்திகள் வெளியிடப்பட்டன.
சமூக ஆர்வலர் சரவணன், நம் நாளிதழ் செய்திகளை சுட்டிக்காட்டி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக முறைகேடுகள் தொடர்பாக, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலரை சந்தித்து புகார் அளித்தார்.
இதுதொடர்பாக விசாரிக்க, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை கமிஷனர் லட்சுமி உத்தரவின்பேரில் துணை இயக்குனர் ரவீந்திரநாத் சிங் தலைமையில் நான்கு பேர் கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டது. திருப்பூர் வந்த இக்குழுவினர், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நேற்று விசாரணையை துவக்கினர். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் வசந்தராம்குமார் உடனிருந்தார்.
நடந்ததை சொன்ன மாற்றுத்திறனாளிகள்
சமூக ஆர்வலர் சரவணன், மாற்றுத்திறனாளிகள் வெங்கடேஸ்வரன், கனகராஜ் ஆகியோர், ஸ்கூட்டர் வழங்குவதில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து சிறப்புக்குழுவினரிடம் தெரிவித்தனர். மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டர் வழங்கிய நிறுவனத்தினரும் வரவழைக்கப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டது.
2024 - 25 ம் ஆண்டுக்கான ஸ்கூட்டர் பெறும் பயனாளிகள் பட்டியலில் உள்ளவர்கள் விவரம்; மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் ஸ்கூட்டர் பெற்ற பயனாளிகள் பட்டியல் விவரங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.
சிறப்புக்குழு கேள்விகள்
குறிப்பிட்ட பயனாளி பெயரில் பதிவு செய்து ஆர்.சி., புக் வழங்கிவிட்டு, ஸ்கூட்டரை, பட்டியலில் கடைசி நிலையில் உள்ள வேறு மாற்றுத்திறனாளிக்கு வழங்கியது தொடர்பாக, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தினரிடமும், ஸ்கூட்டர் நிறுவனத்தினரிடமும் கிடுக்கிப்பிடி கேள்விகள் கேட்டனர்.
அங்கன்வாடி பணியாளர், ரேஷன் பணியாளர்களுக்கு ஸ்கூட்டர் வழங்கியது தொடர்பான விசாரணை அதிகாரிகளின் கேள்விக்கு, 'அவர்கள் தவறான தகவல் அளித்து ஸ்கூட்டர் பெற்றுக்கொண்டனர். புகார் வந்ததையடுத்து, ஸ்கூட்டரை பறிமுதல் செய்துவிட்டோம்' என, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தினர் சமாளித்தனர்.
வீடுகளுக்கு சென்ற குழுவினர்
தொடர்ந்து, ஸ்கூட்டர் பெற்ற மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு சென்ற விசாரணை அதிகாரிகள் குழுவினர், உண்மையான பயனாளிக்குதான் ஸ்கூட்டர் வழங்கப்பட்டுள்ளதா; அவரிடம் ஆர்.சி., புக் உள்ளதா; பணிக்கு செல்கிறாரா; மாற்றுத்திறனாளிக்கு வழங்கப்பட்ட ஸ்கூட்டரை வேறு நபர்கள் பயன்பாட்டுக்கு கொடுத்துள்ளனரா என, ஆய்வு நடத்தினர்.
---
மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டர் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகார்களை தொடர்ந்து, திருப்பூர் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலகத்தில், துணை இயக்குனர் ரவீந்திரநாத் சிங் தலைமையிலான சிறப்புக்குழுவினர் விசாரணை மேற்கொண்டனர்.