/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பேரிடர் கால மீட்பு பணி; விழிப்புணர்வு ஒத்திகை
/
பேரிடர் கால மீட்பு பணி; விழிப்புணர்வு ஒத்திகை
ADDED : அக் 14, 2024 11:50 PM

திருப்பூர் : தீயணைப்புத்துறை சார்பில், கலெக்டர் அலுவலக வளாகத்தில், பேரிடர் கால பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஒத்திகை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
கலெக்டர் கிறிஸ்துராஜ் ஒத்திகையை துவக்கி வைத்து பார்வையிட்டார். தீயணைப்பு துறை மாவட்ட அலுவலர் அண்ணாதுரை, உதவி அலுவலர் இளஞ்செழியன், திருப்பூர் தெற்கு நிலைய அலுவலர் மோகன் உள்பட திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, பல்லடம், ஊத்துக்குளி தீயணைப்பு வீரர்கள் 32 பேர் பங்கேற்றனர்.
வெள்ளப்பெருக்கின்போது மக்களை மீட்க பயன்படுத்தப்படும் ரப்பர் படகு, ரப்பர் டியூப், லைப் ஜாக்கெட், கான்கிரீட், முறிந்து விழுந்த மரங்களை அறுக்கும் கருவி, தீயணைப்பு கருவிகள், கயிறு, ஏணி, தீ விபத்தின்போது கதவுகளை உடைக்க பயன்படுத்தும் கருவி போன்ற பேரிடர் காலங்களில் தீயணைப்பு துறையினர் பயன்படுத்தும் கருவிகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன; அந்த கருவிகளை பயன்படுத்தி, வெள்ளப்பெருக்கு, தீ விபத்து காலங்களில், மீட்பு பணிகள் மேற்கொள்வது, மனிதர்கள், விலங்குகளை பாதுகாப்பது தீயணைப்பு வீரர்கள் செயல் விளக்கம் அளித்தனர்.
தீயணைப்பு துறை மாவட்ட உதவி அலுவலர் வீரராஜ் பேசினார்.
குறைகேட்பு கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள், அரசு அதிகாரிகள், தீயணைப்பு துறையினரின் விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சியை பார்வையிட்டனர்.