/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஓட்டுக்கு மட்டும் நாங்கள் வேண்டுமா? நரிக்குறவர் காலனி மக்கள் கேள்வி
/
ஓட்டுக்கு மட்டும் நாங்கள் வேண்டுமா? நரிக்குறவர் காலனி மக்கள் கேள்வி
ஓட்டுக்கு மட்டும் நாங்கள் வேண்டுமா? நரிக்குறவர் காலனி மக்கள் கேள்வி
ஓட்டுக்கு மட்டும் நாங்கள் வேண்டுமா? நரிக்குறவர் காலனி மக்கள் கேள்வி
ADDED : நவ 04, 2024 10:40 PM

திருப்பூர் ; 'ஓட்டு கேட்டு வரும் அரசியல் கட்சியினருக்கு, நாங்கள் படும் துயரம் கண்ணுக்கு தெரியவில்லை' என, குறைகேட்பு கூட்டத்தில் கலெக்டரிடம் மனு அளிக்க வந்த நரிக்குறவர் குடும்பத்தினர் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. கலெக்டர் கிறிஸ்துராஜ், மக்களிடமிருந்து மனுக்களை பெற்று, நடவடிக்கை எடுப்பதற்காக, துறை சார்ந்த அலுவலர்களிடம் வழங்கினார்.
ஊசி, பாசி விற்க முடியலே...
பல்லடம், அறிவொளி நகர், நரிக்குறவர் காலனி மக்கள் கூறியதாவது:
பல்லடம் தாலுகா, அறிவொளி நகர் நரிக்குறவர் காலனியில், 25 ஆண்டுகளாக, 140 குடும்பங்கள் வசிக்கிறோம். தொடர் மழையால், 26 வீடுகள் இடிந்து விட்டன. வீடுகள், மேற்கூரை இன்றியும், சுவர்கள் இடிந்த நிலையிலும் உள்ளன. வெளியே சென்று, பாசி, ஊசி விற்பனை தொழில் செய்ய முடியாமல் முடங்கியுள்ளோம்.
தேர்தல் நேரத்தில் மட்டும் ஓட்டுக்காக அரசியல் கட்சியினருக்கு நாங்கள் தேவைப்படுகிறோம். அதன்பின் எங்களை மறந்துவிடுகின்றனர். மழையால் குடியிருப்புகள் சேதமடைந்து, ஐந்து நாளாகியும், இதுவரை யாரும் வரவில்லை. குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப முடியவில்லை. வீடுகளுக்குள் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் நுழைகின்றன.
எங்கள் காலனியில் கலெக்டர் நேரில் ஆய்வு செய்யவேண்டும். குடியிருக்கும் இடத்திலேயே, பட்டா வழங்கவேண்டும். இடிந்த வீடுகளுக்கு, இழப்பீடு வழங்கவேண்டும்.
வீடு ஒதுக்கீட்டில் முறைகேடு
சமத்துவ புரத்தில் வீடுகள் ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்துள்ளதாக, பல்லடம் சமூக ஆர்வலர் அண்ணாதுரை அளித்த புகார் மனு:
பொங்கலுார் ஒன்றியம், மாதப்பூரில், சமத்துவபுரத்தில் வீடு ஒதுக்கீடு செய்ததில் முறைகேடுகள் நடந்துள்ளன. அரசியல் பிரமுகர்களின் தலையீட்டின் காரணமாக, வசதிபடைத்தோருக்கு வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. அவர்கள், அந்த வீடுகளில் குடியிருக்காமல், வாடகைகக்கும், போக்கியத்துக்கும் விட்டுள்ளனர். தகுதியற்றோருக்கு வழங்கப்பட்டுள்ள வீடுகளின் உரிமையை ரத்து செய்யவேண்டும்; வீடு இல்லாத ஏழை மக்களுக்கு வீடு வழங்கவேண்டும்.
ஓடையை மீட்க வேண்டும்
கே.வி.ஆர்., குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதி மக்கள்:
திருப்பூர் மாநகராட்சி, 42வது வார்டு, கே.வி.ஆர்., குடிசை மாற்று வாரிய குடியிருப்பில், 35 வீடுகள் உள்ளன. கடந்த 15 ஆண்டுகளாக பயன்பாட்டிலிருந்த நீர்வழி பாதையை, சிலர் கற்களை கொண்டும், முள்வேலி அமைத்தும் அடைத்துள்ளனர். மழைநீர் செல்ல வழியின்றி, குடியிருப்பு பகுதியில் தேங்கி, பாதிப்பை ஏற்படுத்துகிறது. நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்த பயனுமில்லை. எங்கள் பகுதியில் ஆய்வு செய்து, நீர்வழி பாதையை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்க வேண்டும்.
வீடு ஒன்று வேண்டும்
தொட்டிபாளையத்தை சேர்ந்த கார்த்திக், தனது மாற்றுத்திறனாளி மகளுடன் அளித்த மனு:
எனது மகளுக்கு 15 வயது பூர்த்தியாகிவிட்டது. மாற்றுத்திறனாளியான அவரால், சுயமாக செயல்படமுடியாது. அதனால், எங்களுக்கு வாடகைக்கு வீடு தர மறுக்கின்றனர். எங்கள் மகளை பராமரிக்க முடியாமல் பரிதவிக்கிறோம். குடிசை மாற்றுவாரியத்தில் பலமுறை மனு அளித்தும், முன்னுரிமை அடிப்படையிலோ, மாற்றுத்திறனாளி என்கிற அடிப்படையிலோ, இதுவரை அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வழங்கவில்லை. எனது பெயரிலோ, குடும்ப உறுப்பினர் பெயரிலோ எந்த அசையும், அசையா சொத்தும் இல்லை. வறுமையான சூழலில் வாழ்ந்துவரும் எங்களுக்கு, அடுக்குமாடி குடியிருப்பில் விரைந்து வீடு ஒதுக்கீடு செய்துதர கலெக்டர் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
காய்ச்சல் பரவுகிறது
திருப்பூர், பலவஞ்சிபாளையம், குறவர் காலனி பகுதி மக்கள், மழைநீர் தேங்கி சுகாதாரம் பாதிக்கப்படுவதாகவும்; காய்ச்சல் பரவுவதால் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளக்கோரியும் மனு அளித்தனர். இவ்வாறு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்றைய குறைகேட்பு கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து மொத்தம், 362 மனுக்கள் பெறப்பட்டன.