ADDED : செப் 30, 2025 11:55 PM

திருப்பூர்; கல்விக்கடவுளான சரஸ்வதி தேவியை வழிபடுவதும்; 'செய்யும் தொழிலே தெய்வம்' என்பதற்கேற்ப, அவரவர் தொழிலுக்கு உதவும் ஒவ்வொரு உபகரணத்துக்கும் நன்றி சொல்லும் விதமாக, சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது.
இந்நாட்களில் வீடு முழுக்க சுத்தம் செய்து, வீட்டு வாசலில் மாட்டு சாணம் பூசியும், தெளிப்பதை மங்களகரமான செயலாக மக்கள் கருது கின்றனர். முந்தைய ஆண்டுகளில் நகர, கிராமப்புறங்களில் மாடு வளர்ப்பு என்பது இருந்தது. மாட்டின் சாணத்தை எடுத்து, வீடுகளின் வாசலில் பூசியும், மெழுகியும் வந்தனர்; மாட்டு சாணம் எளிதாக கிடைத்தது.
ஆனால், சில ஆண்டுகளாக நகர்ப்புறங்களில் மாடு வளர்ப்பு என்பது, 90 சதவீதம் குறைந்துவிட்டது. மிக சொற்ப அளவிலான இடங்களில் மட்டும் தான் மாடு, ஆடு உள்ளிட்ட கால்நடைகள் வளர்க்கப்படுகின்றன. ஆனால், கிராமப்புறங்களில் மாடு வளர்ப்பு என்பது, பரவலாக இருக்கிறது.
இந்நிலையில், நகரப்பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, தீபாவளி உள்ளிட்ட விசேஷ நாட்களில், மாட்டு சாணத்தால் வீடுகளில் வாசல், முகப்பு பகுதியை பூசி, மெழுக வேண்டும் என்ற விருப்பம் இருப்பினும், மாட்டு சாணம் கிடைப்பது அரிதானதாகவே இருக்கிறது.
இந்நிலையில், நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்கள் சிலர், கிராமப்புறங்களுக்கு சென்று, மாடு வளர்ப்போரிடம் இருந்து மாட்டு சாணத்தை மொத்தமாக வாங்கி வந்து, சில்லரை விற்பனை செய்கின்றனர்.
திருப்பூர், சூசையாபுரத்தில் முருகன் என்பவர் கூறியதாவது:
கடந்த, 10 ஆண்டாக மாட்டு சாணம் விற்பனை செய்கிறேன். ஆயுத பூஜை. சரவஸ்தி பூஜை போன்று விசேஷ நாட்களில், நிறைய பேர், மாட்டு சாணம் வாங்குகின்றனர். ஒரு மூட்டை சாணத்துக்கு, 500 ரூபாய், வண்டி வாடகை சேர்த்து, 700 ரூபாய் வரை செலவாகும். ஒரு உருண்டை, 10 ரூபாய்க்கு விற்பனை செய்கிறோம். நகர்ப்புறங்களில் மாட்டு சாணத் துக்கு தட்டுப்பாடு என்பதால், விசேஷ நாட்களில் நிறைய பேர் வாங்கி செல்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.