/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கோழி - மீன் கழிவுடன் குடிநீர் சப்ளை
/
கோழி - மீன் கழிவுடன் குடிநீர் சப்ளை
ADDED : நவ 01, 2024 10:48 PM

பல்லடம்; கோழி மற்றும் மீன் கழிவுகளுடன் குடிநீர் சப்ளை செய்யப்பட்டது, பல்லடம் அருகே, கிராம மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பல்லடம் ஒன்றியம், கரைப்புதுார் ஊராட்சி, அமராவதி நகர் பகுதியில், நேற்று காலை, விநியோகிக்கப்பட்ட குடிநீருடன் கோழி மற்றும் மீன் கழிவுகள் சேர்ந்து வந்தன. இதனைப் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து, அப்பகுதியினர் கூறியதாவது:
கரைப்புதுார் ஊராட்சிக்கு, அத்திக்கடவு, பில்லுார் மற்றும் மேட்டுப்பாளையம் குடிநீர் திட்டங்களின் கீழ், குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.
நொச்சிபாளையம் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி வாயிலாக, இப்பகுதிக்கு குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.
குடிநீர் தொட்டிகள், அவ்வப்போது சுத்தம் செய்யப்பட்டு குளோரினேஷன் செய்யப்பட வேண்டும்.
ஆனால், இந்த தொட்டி, எப்போது சுத்தம் செய்யப்பட்டது என்பதே தெரியாது. இன்று (நேற்று) விநியோகிக்கப்பட்ட குடிநீரில், கோழி மற்றும் மீன் கழிவுகள் மிதந்து வந்தன. குடிநீர், துர்நாற்றத்துடன் இருந்தது.
இது குறித்து குடிநீர் விநியோகிப்பாளரிடம் கேட்டால், அப்படித்தான் வரும் என அலட்சியத்துடன் கூறினார். தொடர் மழை காரணமாக, ஏற்கனவே இப்பகுதியில், காய்ச்சல் பாதிப்பு உள்ளது.
இச்சூழலில், கோழி, மீன் கழிவுகளுடன் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருவது, பொதுமக்களுக்கு உடல் ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தும். மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அவ்வப்போது சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.