/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மீண்டும் இயக்கத்தை துவக்கிய சாய ஆலைகள்
/
மீண்டும் இயக்கத்தை துவக்கிய சாய ஆலைகள்
ADDED : மார் 18, 2025 11:49 PM
திருப்பூர்; திருப்பூரில், 350 சாய ஆலைகள், 18 பொது சுத்திகரிப்பு மையங்கள் அமைத்து செயல்படுகின்றன. மங்கலம் பொது சுத்திகரிப்பு மையம், 13 சாய ஆலைகளை உறுப்பினராக கொண்டு செயல்படுகிறது. சாய ஆலைகளிலிருந்து சாயக்கழிவு நீர் பெறப்பட்டு, ஜீரோ டிஸ்சார்ஜ் தொழில்நுட்பத்தில் சுத்திகரிக்கப்படுகிறது.
சாய ஆலைகளிலிருந்து சுத்திகரிப்பு மையத்துக்கு சாயக்கழிவுநீர் அனுப்பவும், சுத்திகரிப்பு மையத்திலிருந்து பிரெய்ன் சொல்யூஷன் மற்றும் தண்ணீரை சாய ஆலைக்கு அனுப்பவும் நொய்யலாற்று பகுதியில் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. அதில், கடந்த, 8ம் தேதி உடைப்பு ஏற்பட்டது. சாயக்கழிவுநீர் பீறிட்டு வெளியேறி, ஆற்றில் கலந்தது. விவசாயிகள் அளித்த புகாரை அடுத்து, மங்கலம் சுத்திகரிப்பு மையத்துக்கு உட்பட்ட, 13 சாய ஆலைகளின் இயக்கத்தை நிறுத்தி மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
பொதுசுத்திகரிப்பு மையத்தினர், உடைப்பு ஏற்பட்ட குழாய்களை தோண்டி எடுத்துவிட்டு, புதிய குழாய் அமைக்கும் பணிகளை மேற்கொண்டனர். 800 மீட்டர் துாரத்துக்கு புதிய குழாய் அமைக்கப்பட்டுள்ளது. குழாய் சீரமைப்பு பணிகள் முடிந்ததால், மாசுக்கட்டுப்பாடு வாரிய மாவட்ட பொறியாளர் (வடக்கு) செந்தில்குமார் தலைமையிலான அதிகாரிகள், மங்கலம் சுத்திகரிப்பு மையம் மற்றும் சாய ஆலைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
புதிய குழாய் அமைத்துள்ள பகுதி, 'மேன்ஹோல்' ஆகியவற்றை ஆய்வு நடத்தினர். குழாய் பதிக்கும் பணிகள் முடிந்ததால், பொதுசுத்திகரிப்பு மையம் மற்றும், 13 சாய ஆலைகள் மீண்டும் இயக்கத்தை துவக்க அனுமதி அளிக்கப்பட்டது.
இதனால், ஒரு வாரத்துக்குப்பின், சாய ஆலைகள் நேற்றுமுதல் மீண்டும் இயக்கத்தை துவக்கியுள்ளன.