/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மின் இணைப்பு துண்டித்தும் தாறுமாறாக ஓடிய மின் மீட்டர்; டெஸ்ட் ரிப்போர்ட் இழுத்தடிப்பு
/
மின் இணைப்பு துண்டித்தும் தாறுமாறாக ஓடிய மின் மீட்டர்; டெஸ்ட் ரிப்போர்ட் இழுத்தடிப்பு
மின் இணைப்பு துண்டித்தும் தாறுமாறாக ஓடிய மின் மீட்டர்; டெஸ்ட் ரிப்போர்ட் இழுத்தடிப்பு
மின் இணைப்பு துண்டித்தும் தாறுமாறாக ஓடிய மின் மீட்டர்; டெஸ்ட் ரிப்போர்ட் இழுத்தடிப்பு
ADDED : செப் 06, 2025 06:45 AM
திருப்பூர்; தென்னம்பாளையத்தில் மின் மீட்டர் கோளாறு காரணமாக வீட்டு மின் இணைப்புக்கு, 61 ஆயிரம் ரூபாய் மின் கட்டணம் வந்தது. மின் மீட்டர் டெஸ்ட் ரிப்போர்ட் வராமல் மின் நுகர்வோர் தவிக்கின்றனர்.
திருப்பூர், பூம்புகார் கிழக்கு, செல்வபுரத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணியம், விவசாயி. இவரது வீட்டில் உள்ள ஒரு மின் இணைப்புக்கு நடப்பு மாதம் 61 ஆயிரம் ரூபாய் மின் கட்டணம் என அளவுக்கதிகமாக வந்தது. வழக்கத்தை விட கூடுதலாகவும், சந்தேகப்படும் வகையிலும் இருந்த நிலையில் இது குறித்து அவர் மின் வாரிய ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்றார்.
மேலும் மின் இணைப்பை முற்றிலும் துண்டிப்பு செய்த பின்னரும் மீட்டர் இயங்கி, சில மணி நேரங்களில் பல நுாறு யூனிட்டுகள் என சம்பந்தமில்லாத வகையில் காட்டியது. தகவலின் பேரில், மின் வாரிய ஊழியர்கள் கடந்த 29ம் தேதி, மீட்டரை ஆய்வு செய்வதற்காக கழற்றிச் சென்றனர். மீண்டும், 31ம் தேதி பொருத்தினர். அதன்பின் தற்போது மீட்டர் முறையாக செயல்படுகிறது.
இருப்பினும், இதற்கான டெஸ்ட் ரிப்போர்ட்டை அலுவலர்கள் தரவில்லை. ஒரு மணி நேரத்தில் பெறக்கூடிய ரிப்போர்ட்டை ஒரு வாரமாகியும் மின் வாரியத்தினர் தராமல், இதில் என்ன பிரச்னை என்றே தெரியாத நிலை உள்ளது. மேலும், தவறாக குறிப்பிடப்பட்ட மின் கட்டணம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
ஒரு நாளில் சரி செய்வதாக கூறியவர்கள் ஒரு வாரமாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று மின் நுகர்வோர் பிரிவு அலுவலகம், செயற்பொறியாளர் அலுவலகம், மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் என நடையாக நடந்தும் தீர்வு கிடைக்கவில்லை. வரும், 15ம் தேதி மின் கட்டணம் செலுத்த கடைசி நாள். மின் கட்டணம் செலுத்தாவிட்டால் மின் இணைப்பு துண்டிப்பர். இதே நிலை தான் மற்றொரு வீட்டு மின் இணைப்பிலும் உள்ளது, என்று புலம்புகிறார் மின் நுகர்வோர்.
மின் வாரிய தரப்பில் கூறுகையில், 'எம்.ஆர்.டி., எனப்படும் மீட்டர் பரிசோதனை பிரிவில் பணியாற்றும் உதவி பொறியாளர் கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகிறார். இதனால், பரிசோதனைகள் உடனுக்குடன் செய்து முடித்தாலும், அதன் அறிக்கை முடிவுகள் வெளியிட தாமதமாகிறது.
அவ்வகையில் இது தாமதமாகியிருக்கலாம். தொடர் விடுமுறை என்பதால் திங்கட்கிழமை இதன் முடிவு தெரிவிக்கப்படும்,' என்று தெரிவிக்கப்பட்டது.