ADDED : செப் 27, 2025 12:03 AM

அவிநாசி; அவிநாசி நகராட்சியில், 2வது நாளாக ஆக்கிரமிப்பு கடைகள் மற்றும் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத் துறையினர் ஈடுபட்டனர்.
அவிநாசி நகராட்சி பகுதியிலுள்ள முக்கிய வீதிகளில் கடைகளால் ஏற்பட்ட ஆக்கிரமிப்புகள், மற்றும் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டுமென பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதனை தொடர்ந்து, நேற்று முன்தினம் சேவூர் ரோடு சந்திப்பில் கிழக்கு ரத வீதியில் இருந்து இடது புறத்தில் சூளை வரை இருந்த ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.
நேற்றும் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடர்ந்து. அவ்வகையில், சூளையில் ஆரம்பித்து வலதுபுறம் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடர்ந்தது. குறிப்பாக, வேளாண்மை அலுவலகம், ஆர்.ஐ. அலுவலகம் ஆகியவற்றின் முன் இருந்த காய்கறி கடைகள், தாலுகா அலுவலகம் முன்பு என அனைத்து பகுதிகளிலும் நெடுஞ்சாலைத்துறையினர் ஆக்கிரமிப்பை அகற்றினர்.
ஆலோசனை கூட்டம் இதற்கிடையில் நேற்று அவிநாசி அனைத்து வியாபாரிகள் மற்றும் அனைத்து வணிகர்கள் சங்கம் சார்பில், ஆலோசனை கூட்டம், செங்குந்தர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
கூட்டம் குறித்து வணிகர் சங்கத்தினர் கூறியதாவது:
வரும் ஞாயிறன்று (நாளை), கோவை ரோட்டில் உள்ள சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்படும். இதனை தொடர்ந்து அனைத்து பகுதிகளிலும் ஒவ்வொரு கட்டமாக நடைபெறும் என நெடுஞ்சாலை உதவி கோட்ட பொறியாளர் தெரிவித்துள்ளார். கடந்த நான்கு ஆண்டுகளாக நகராட்சி பகுதியில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அதிகரித்து, பல விபத்துகளால் உயிரிழப்புகளும் ஏற்பட்டது. இந்த பிரச்னை சம்பந்தமாக கோரிக்கையை ஏற்று தற்போது, ஆக்கிரமிப்பு அகற்றி வருகின்றனர். இந்த நடவடிக்கையை தடுக்கும் விதமாக பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள் சிலரை துாண்டி விடுகின்றனர். பொது பிரச்னைகளில் தனி மனித தாக்குதல் என்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.