/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'கோமா' நிலையில் இ.எஸ்.ஐ. மருந்தகம்
/
'கோமா' நிலையில் இ.எஸ்.ஐ. மருந்தகம்
ADDED : செப் 16, 2025 09:53 PM
- நமது நிருபர் -
இ.எஸ்.ஐ., மருந்தகத்தில், குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் இல்லாததால், நோயாளிகள், ஊழியர்கள் சிரமம் எதிர்கொள்கின்றனர்.
திருப்பூர், காலேஜ் ரோட்டில் இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் மருந்தகம் செயல்படுகிறது. இங்கு, இ.எஸ்.ஐ., திட்டத்தின் கீழ் இணைந்துள்ள தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள், சிகிச்சைக்காகவும், மருந்து மாத்திரை வாங்கவும் தினசரி வந்து செல்கின்றனர்.
இந்த கட்டடம், கடந்த, 13 ஆண்டுகளாக வாடகை கட்டடத்தில் செயல்படுகிறது. கட்டடம் பராமரிப்பின்றி இருப்பதால், மழையின் போது, மழைநீர் ஒழுகுகிறது; குறிப்பாக, நோயாளிகளின் விபரம் அடங்கிய ஆவணம் வைக்கப்பட்டுள்ள இடத்தில், மழைநீர் அதிகளவில் ஒழுகுவதால், அவை நனைந்து சேதமடையும் வாய்ப்புள்ளது.
மேலும் இக்கட்டடத்தில் குடிநீர், கழிப்பறை இல்லாததால், மருந்தகம் வந்து செல்லும் நோயாளிகள் மற்றும் ஊழியர்கள் சிரமம் அடைகின்றனர். தினசரி, காலை, மாலையில், 100க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.
மருந்தகத்துக்கு வந்து செல்லும் சிலர் கூறுகையில், 'இந்த மருந்தகத்தில் குடிநீர் வசதி செய்து கொடுக்கப்படவில்லை. வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என, சம்பந்தப்பட்ட துறையினருக்கு புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே, இ.எஸ்.ஐ., நிர்வாகம் இவ்விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.