'இ.எஸ்.ஐ. தொழிலாளர்களுக்கு கூடுதல் சலுகை கிடைக்கும்'
'இ.எஸ்.ஐ. தொழிலாளர்களுக்கு கூடுதல் சலுகை கிடைக்கும்'
UPDATED : ஜூலை 21, 2026 06:40 PM
ADDED : ஜூலை 21, 2026 06:32 PM

திருப்பூர்: -: தொழிலாளர் சட்ட திருத்தம் வாயிலாக, இ.எஸ்.ஐ., தொழிலாளர்களுக்கு கூடுதல் சலுகை கிடைக்குமென, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.புதிய தொழிலாளர் சட்டங்களில், பங்களிப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தில் நடந்தது. சங்கத்தின் பெண்கள் முன்னேற்ற துணை குழு தலைவர் சுமிதா ரவி வரவேற்றார்.
ஏற்றுமதியாளர் சங்க இணை செயலாளர் ஆனந்த் பேசுவையில், ''2030ம் ஆண்டுக்குள் ஒரு லட்சம் கோடி ரூபாய் ஏற்றுமதி இலக்கை அடைய, தொழிலாளர் நலன், சமூகப் பாதுகாப்பு மற்றும் சட்ட இணக்கத்தை உறுதி செய்வது முக்கியம். இந்தியா பல நாடுகளுடன் மேற்கொண்டுள்ள வரியில்லா வர்த்தக ஒப்பந்தங்களால் புதிய ஏற்றுமதி வாய்ப்புகளை உருவாக்கியுள்ள நிலையில், தொழிலாளர் பாதுகாப்பு, திறன் மேம்பாடு மற்றும் புதிய தொழிலாளர் சட்டங்களை முழுமையாக பின்பற்றுவதன் வாயிலாக திருப்பூரின் உலகளாவிய போட்டித்திறனை மேலும் வலுப்படுத்த முடியும்,'' என்றார்.
கோவை இ.எஸ்.ஐ., துணை மண்டல அலுவலகத்தின் துணை இயக்குனர் கார்த்திகேயன் பேசியதாவது:
ஒரே மாதிரியான சம்பள வரையறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால், இனி புதிய சம்பள வரையறை அடிப்படையில், இ.எஸ்.ஐ., மற்றும் பி.எப்., பங்களிப்பு கணக்கிடப்படும். பல்வேறு பாதுகாப்புச் சட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. தற்போதுள்ள தொழிலாளர் மற்றும் நிறுவனங்களின் பங்களிப்பு விகிதம் தொடரும். முறைசாரா தொழிலாளர்களுக்கும் சமூகப் பாதுகாப்பு பலன்கள் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
சங்கத்தின் துணை குழு துணை தலைவர் சுருதி, தொழிலாளர் நலன் துணை குழு உறுப்பினர் கந்தவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
