/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சுற்றுலா மையங்கள் மேம்பாட்டு திட்டங்கள் ஆய்வு நடைமுறைக்கு வர எதிர்பார்ப்பு
/
சுற்றுலா மையங்கள் மேம்பாட்டு திட்டங்கள் ஆய்வு நடைமுறைக்கு வர எதிர்பார்ப்பு
சுற்றுலா மையங்கள் மேம்பாட்டு திட்டங்கள் ஆய்வு நடைமுறைக்கு வர எதிர்பார்ப்பு
சுற்றுலா மையங்கள் மேம்பாட்டு திட்டங்கள் ஆய்வு நடைமுறைக்கு வர எதிர்பார்ப்பு
ADDED : ஜன 20, 2025 06:26 AM
உடுமலை : உடுமலை பகுயிலுள்ள சுற்றுலா மையங்களான அமராவதி மற்றும் திருமூர்த்திமலையில் சுற்றுலா வளர்ச்சி திட்டங்கள் மற்றும் மேம்பாடு குறித்து, சுற்றுலாத்துறை அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.
உடுமலை அருகேயுள்ள, அமராவதி அணை சிறந்த சுற்றுலா மையமாக உள்ளது. இங்கு, வனத்துறை முதலைப்பண்ணை, படகு சவாரி, அமராவதி சைனிக் பள்ளி, அணையில் அரிய வகை மீன் இனமான திலேபியா மீன் என சிறப்பு பெற்றது.
மேலும், அணையின் இடது கரை பூங்கா, வலது கரை பூங்கா சிறுவர் பூங்கா மற்றும் கற்றாலை பூங்கா, கள்ளிப்பூங்கா, பாறைப்பூங்கா என 19 ஏக்கர் பரப்பளவில், நீளமான பூங்கா அமைந்துள்ளது.
சுற்றுலா அம்சங்கள் நிறைந்து காணப்படுவதால், பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களிலிருந்து, அமராவதி சுற்றுலா மையத்திற்கு, ஆண்டுக்கு, 1.20 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகையும், நுழைவு கட்டணமாக, ரூ. 10 லட்சம் வரை உள்ளது.
1958ல் அமைக்கப்பட்ட பூங்கா, நீர் வளத்துறையில் போதிய நிதி ஒதுக்காத நிலையில், பராமரிக்க முடியாமல், சிக்கல் ஏற்பட்டு வருகிறது.
அமராவதி அணையிலிருந்து, மறையூர், மூணாறு என கேரள மாநில சுற்றுலா மையங்கள் அமைந்துள்ளதால், அங்கு செல்லும் சுற்றுலா பயணியர் இங்கு வருகின்றனர்.
சுற்றுலா பயணியருக்கு தேவையான தங்கும் விடுதி, பூங்கா மேம்பாடு உள்ளிட்ட சுற்றுலா வளர்ச்சித்திட்ட பணிகள் மேற்கொள்ள வேண்டும், என பல ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதற்காக, 5.15 கோடி ரூபாய் திட்ட அறிக்கை தயாரித்து, அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், எம்.பி., ஈஸ்வரசாமி, திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ், மாவட்ட சுற்றுலா அலுவலர் அரவிந்த் குமார் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
திருமூர்த்திமலை
உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலையில், மலைமேல், 940 மீட்டர் உயரத்தில், மூலிகை குணங்களுடன் விழும் பஞ்சலிங்க அருவி, பஞ்சலிங்க கோவில், மலையடிவாரத்தில், சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் ஒருங்கே எழுந்தருளியுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில், திருமூர்த்தி அணை, படகு இல்லம், வண்ண மீன் பூங்கா என சிறந்த ஆன்மீகம் மற்றும் சுற்றுலா மையமாக உள்ளது.
ஆண்டுக்கு, 3 லட்சம் சுற்றுலா பயணியர் வந்து செல்லும் நிலையில், சுற்றுலா வளர்ச்சியை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது.
இதில், திருமூர்த்தி அணைப்பகுதியில், ரூ.18.50 கோடி செலவில், 15 ஏக்கர் பரப்பளவில் புதிதாக பூங்கா அமைக்க திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
மேலும், பஞ்சலிங்க அருவி மற்றும் செல்லும் வழித்தடம் புதுப்பித்தல், கோவில் வளாகத்தில் தீர்த்தம், இருக்கை அமைத்தல், பஸ் ஸ்டாண்ட், வாகன நிறுத்தம், கழிப்பறை, குடிநீர் என ரூ. 39 லட்சம் மதிப்பில் அடிப்படை வசதிகள் மேம்பாடு என விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
இதனை, அமைச்சர் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். சுற்றுலா மையங்கள் ஆய்வுடன் திட்டங்களை கிடப்பில் போடாமல், உரிய நிதி ஒதுக்கி, அடிப்படை வசதிகள், சுற்றுலா வளர்ச்சியை மேம்படுத்த வேண்டும், என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு, கோதவாடி குளத்தை சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் ஆய்வு செய்தார்.
கோவை, கிணத்துக்கடவு அருகே உள்ள கோதவாடி குளம், 384 பரப்பளவில் உள்ளது. இந்த குளத்திற்கு, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்த வாரம் பி.ஏ.பி., யிலிருந்து தண்ணீர் விடப்பட்டது. இதனால் குளத்தின் ஒரு பகுதி நிரம்பி இருந்தது.
இந்த குளத்தை சுற்றுலாத்தலமாக மாற்ற வேண்டுமென மக்கள் பலர் வலியுறுத்தி வந்தனர்.
இதை தொடர்ந்து நேற்று தமிழக சுற்றுலா துறை அமைச்சர் ராஜேந்திரன், கோதவாடி குளத்தை ஆய்வு செய்தார்.
இதைத்தொடர்ந்து இந்த குளத்தில் நீர் நிரப்பி, சுற்றுலா தலமாக மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் என்ன என்று, அப்பகுதி மக்கள் மற்றும் அரசு அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
இதில், கோவை மாவட்டத்தில் கோதவாடி குளம் பெரிதாக உள்ளது. இதை சுற்றுலா தலமாக மாற்ற முதலில் குளத்துக்கு நீர்வரத்தை ஏற்பாடு செய்ய வேண்டும். இதற்கான சாத்திய கூறுகள் குறித்து அரசு அதிகாரிகள் மற்றும் பொள்ளாச்சி எம்.பி., ஈஸ்வரசமியிடம் கேட்டறிந்தார்.
மேலும், இந்த குளத்திற்கு தண்ணீர் வரத்துக்கு, நீர்வளத் துறை அமைச்சரிடம் பேசப்படும். என்றார்.