/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
போலி குறுஞ்செய்தியால் ஆபத்து: ரூ.7.47 லட்சம் ரூபாய் 'அபேஸ்'
/
போலி குறுஞ்செய்தியால் ஆபத்து: ரூ.7.47 லட்சம் ரூபாய் 'அபேஸ்'
போலி குறுஞ்செய்தியால் ஆபத்து: ரூ.7.47 லட்சம் ரூபாய் 'அபேஸ்'
போலி குறுஞ்செய்தியால் ஆபத்து: ரூ.7.47 லட்சம் ரூபாய் 'அபேஸ்'
ADDED : டிச 25, 2024 07:52 AM

பல்லடம்; மொபைல் போனுக்கு வந்த குறுஞ்செய்தியால், 7.47 லட்சம் ரூபாய் இழந்ததாக, பல்லடம் அருகே, கன்சல்டிங் உரிமையாளர் ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம்,பல்லடம் - கணபதிபாளையம் ஊராட்சி, நல்லுார்பாளையத்தை சேர்ந்த அய்யாசாமி மகன் தங்கராஜ் 48; ஆட்டோ கன்சல்டிங் உரிமையாளர். ஆன்லைன் நுாதன மோசடியால் ஏமாற்றப்பட்ட இவர், 7.47 லட்சம் ரூபாயை பறிகொடுத்துள்ளார். இது குறித்து, அவர் மாவட்ட 'சைபர் கிரைம்' போலீசில் புகார் கொடுத்தார்.
இது குறித்து தங்கராஜ் கூறியதாவது:
கடந்த, 21ம் தேதிகாலை, 9.22 மணிக்கு எனது 'வாட்ஸ் அப்' எண்ணுக்கு அவசர தேவை. உங்களது சிட்டி யூனியன் வங்கி கணக்கின் சுய விவரங்களை உடனடியாக புதுப்பித்துக் கொள்ளுமாறு குறுஞ்செய்தி வந்தது. தொடர்ச்சியாக அடுத்தடுத்து இதுபோன்ற குறிஞ்செய்தி வந்ததால், வங்கியிலிருந்து கேட்கின்றனர் என்று நினைத்து, இணையதள இணைப்புக்குள் (link) சென்றேன்.
தனியார் வங்கி (சிட்டி யூனியன் வங்கி) இணையதளம் போன்றே இருந்த அந்த பக்கத்தில் கேட்கப்பட்டிருந்த பெயர், பிறந்த தேதி ஆகியவற்றை பதிவிட்டேன். தொடர்ந்து, டெபிட் கார்டு எண் கேட்கப்பட்டிருந்ததால், அந்த இணைப்பில் இருந்து வெளியே வந்து விட்டேன். சிறிது நேரம் கழித்து, எனது வங்கி கணக்கில் இருந்து, 1.59 லட்சம் ரூபாய் பணம் எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்தது.
உடனே, சிட்டி யூனியன் வங்கி வாடிக்கையாளர் சேவை மைய எண்ணை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்து, வங்கி கணக்கை முடக்குவதற்குள், அடுத்தடுத்து பணம் எடுக்கப்பட்டு, மொத்தம், 7.47 லட்சம் ரூபாய் எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்தது. இது தொடர்பாக, மாவட்ட 'சைபர்' கிரைம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.
எளிமைப்படுத்த கோரிக்கை
தங்கராஜ், தனது வங்கிக் கணக்கில் இருந்து பணம் 'டெபிட்' ஆக துவங்கியதுமே, உடனடியாக வங்கியை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்துள்ளார். வங்கிக்கும், வங்கி சார்ந்த மேலாண்மை துறைக்கும் இடையிலான பரிவர்த்தனைக்கு தாமதமானதால், மோசடியை தடுக்க முடியவில்லை என, தங்கராஜ் கவலை தெரிவித்துள்ளார்.
எனவே, இது போன்ற 'ஆன்லைன்' மோசடிகளை விரைவாக தடுக்க உரிய நடவடிக்கைகளை வங்கி நிர்வாகங்கள் மற்றும் 'சைபர் கிரைம்' போலீசார் மேற்கொள்ள வேண்டும்.