/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஓட்டு அரசியலாக மாறிய பி.ஏ.பி., விவசாய சங்கம் குற்றச்சாட்டு!
/
ஓட்டு அரசியலாக மாறிய பி.ஏ.பி., விவசாய சங்கம் குற்றச்சாட்டு!
ஓட்டு அரசியலாக மாறிய பி.ஏ.பி., விவசாய சங்கம் குற்றச்சாட்டு!
ஓட்டு அரசியலாக மாறிய பி.ஏ.பி., விவசாய சங்கம் குற்றச்சாட்டு!
ADDED : ஜன 26, 2025 03:36 AM

பல்லடம்: பி.ஏ.பி., பாசன திட்டத்தை முன்வைத்து ஓட்டு அரசியல் நடப்பதாக, கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
இது குறித்து அதன் மாநில ஊடகப்பிரிவு செயலாளர் ஈஸ்வரன் கூறியதாவது:
திருப்பூர் மாவட்டத்தின் தென்பகுதிகளுக்கு இருக்கின்ற ஒரே ஆதாரம் பி.ஏ.பி., மட்டுமே. பல்வேறு காலகட்டங்களில் பி.ஏ.பி., விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக தான் உள்ளது. ஒவ்வொரு முறையும், பொதுப்பணித்துறையிடம் போராடித்தான் தண்ணீரை பெற வேண்டிய நிலை உள்ளது. காவிரி ஆற்றில் இருந்தும் கூட உபரி நீரைத்தான் நமக்கு வழங்குகின்றன.
ஆனால், பி.ஏ.பி.,யில் இருந்து எங்களுக்கே தண்ணீர் வழங்கப்படாத நிலையில், வட்டமலை, பூளவாடி, உப்பாறு பகுதிகளுக்கு தண்ணீர் வினியோகிப்பது ஏற்புடையதல்ல. விதிமுறை மீறி பி.ஏ.பி.,யில் இருந்து தண்ணீர் பிற பகுதிகளுக்கு வினியோகிக்கப்படுவது திட்டத்தை வீணடிக்கும் செயல்.
நாங்கள் ஒன்றும் எந்த ஒரு விவசாயிகளுக்கும் எதிரானவர்கள் அல்ல. ஆனால், பி.ஏ.பி., மூலம், ஏற்கனவே கொண்டுவரப்பட்ட விதிமுறைகளின்படி பாசன நீர் வினியோகிக்கப்பட்டு வரும் நிலையில், இத்திட்டத்தை கெடுப்பது போல், இஷ்டத்துக்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
பாசன சபை விவசாயிகள் யாரையும் கலந்து ஆலோசிக்காமல், தன்னிச்சையாக அரசாணை வெளியிடப்படுமானால், பின், பாசன சபை எதற்காக செயல்படுகிறது? அமைச்சர்கள் ஓட்டு அரசியலுக்காக, தங்களது பகுதிகளுக்கு பி.ஏ.பி., தண்ணீரை எடுத்துச் செல்கின்றனர்.
ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்றிய பின் இதனை செய்திருந்தால் நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டோம். இதனைவிடுத்து, பழைய பி.ஏ.பி., திட்டத்தை கெடுக்கும் வகையில், தண்ணீரை இங்கிருந்து மாற்றி எடுத்துச் செல்வதை கண்டிக்கிறோம்.
ஓட்டுக்காக செய்யப்படும் இந்த நடவடிக்கைகளை தமிழக அரசு கைவிட வேண்டும். பாசன விவசாயிகளுடன் கலந்து ஆலோசித்து, அதன் பின்னரே தண்ணீர் திறப்பது குறித்து முடிவெடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

