/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
3ம் தேதி விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்
/
3ம் தேதி விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்
ADDED : டிச 01, 2024 01:03 AM

3ம் தேதி ஆர்ப்பாட்டம்
தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க செயல் தலைவர் வெற்றி கூறியதாவது:
சேமலைக்கவுண்டம்பாளையத்தில் தெய்வசிகாமணி, அலமேலம்மாள், செந்தில்குமார் ஆகியோர் நள்ளிரவில் மர்ம நபர்களால் கொடூரமாக கொலை செய்யப்பட்டு, நகை கொள்ளயடிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், கிராமப்பகுதிகளில் வசிக்கும் விவசாய குடும்பத்தினர் மத்தியில் பெரும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கடந்தாண்டு பல்லடம், கள்ளங்கிணறு பகுதியில், விவசாய குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மனதில் ஆழமான அச்சத்தை ஏற்படுத்தியது. அதே போல் தற்போது நடந்துள்ள சம்பவம் இந்த ஆட்சியில் குற்றவாளிகளுக்கு சிறிதளவும் எந்த பயமும் இல்லை என்று எண்ணத்தோன்றுகிறது. அமைதியான வாழ்க்கை வாழ்ந்துவரும் கொங்கு மக்கள் மனதில் இப்போது பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
இக்கொலையில் தொடர்புள்ள அனைவரையும் உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும், சட்டம் ஒழுங்கைக் காக்க தவறிய தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்தும், இதுபோன்ற பிரச்னை மீண்டும் ஏற்படாத வகையில், தடுக்க கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தியும், 3ம் தேதி காலை 10:00 மணிக்கு அவிநாசிபாளையம் சுங்கம் நால் ரோடு பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டமைப்பு ஆறுதல்
பிற்படுத்தப்பட்டோர் உரிமைக்கான கூட்டமைப்பு சார்பில், அதன் தலைவர் ரத்தினசபாபதி தலைமையில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேற்று நேரில் சந்தித்து, ''நாங்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்போம், எப்பொழுது வேண்டுமானாலும் உதவி செய்ய தயாராய் இருக்கிறோம்,'' என்று ஆறுதல் கூறினர். துணைத் தலைவர் வெள்ளியங்கிரி, செயலாளர் திருஞானம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
துப்பாக்கி உரிமம் வேண்டும்
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் ஈசன் முருகசாமி முதல்வருக்கு அனுப்பிய மனு:
பல்லடம், கள்ளங்கிணறு கிராமத்தில் 2023 செப்., மாதம், தனது நிலத்தில் மது அருந்தியதை தட்டி கேட்ட விவசாய குடும்பத்தைச் சேர்ந்த, 4 பேர் படுகொலை செய்யப்பட்டனர். மூன்று மாதங்களுக்கு முன், ராயர்பாளையம் பகுதியில், ரவுடி ஒருவர் பட்டப் பகலில் ஓடஓட விரட்டி படுகொலை செய்யப்பட்டார். அடுத்து காரணம்பேட்டையில், மூதாட்டி ஒருவர், மூச்சு திணறடிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
இவ்வாறு, பல்லடம் வட்டாரத்தில், தொடர்ச்சியாக நடந்த கொலை சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தின. இவற்றின் தாக்கம் மறைவதற்குள், சேமலைக் கவுண்டம்பாளையத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். நகை திருடப்பட்டுள்ளது. இது, விவசாயிகள் பொதுமக்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
விவசாயிகளை குறிவைத்து தொடர்ச்சியாக இதுபோன்ற சம்பவங்கள் நடந்து வருகிறது. இதுபோன்ற திருட்டு, கொள்ளை சம்பவங்களை தடுக்க விவசாயிகள் தலையிடும் போது உயிர்ப்பலி ஏற்படுகிறது. இதனால், விவசாய குடும்பத்தினர் ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்படுகின்றனர். தற்காப்புக்காக ஆயுதம் வைத்திருப்பதை இந்திய தண்டனைச் சட்டம் அனுமதிக்கிறது. எனவே, விவசாயிகள் தங்களையும், தங்கள் குடும்பம் மற்றும் சொத்துக்களை பாதுகாத்துக் கொள்ள, விவசாயிகளுக்கு துப்பாக்கி பயன்படுத்தும் உரிமம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.