/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பருத்தி சாகுபடிக்கு மானியம்; விவசாயிகள் கோரிக்கை
/
பருத்தி சாகுபடிக்கு மானியம்; விவசாயிகள் கோரிக்கை
ADDED : ஜூலை 18, 2025 09:30 PM
உடுமலை; உடுமலை பகுதியில், முன்பு பருத்தி சாகுபடி பிரதானமாக இருந்தது; இப்பகுதியில், 20 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமாக, நீண்ட மற்றும் குறுகிய இழை பருத்தி ரகங்கள் பயிரிடப்பட்டு வந்தது.
பல்வேறு காரணங்களால், 1997ம் ஆண்டுக்கு பிறகு, பருத்தி சாகுபடி பரப்பு வெகுவாக குறைந்து விட்டது. மத்திய பருத்தி கழகம் சார்பில், சாகுபடி பரப்பை அதிகரிக்க, மானிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டும் பலனில்லை.
நீண்ட இடைவெளிக்கு பிறகு, கடந்த, 2008ல், நுாறு ஏக்கர் வரை பருத்தி பயிரிடப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளாக, போதிய விலை கிடைக்காதது உட்பட காரணங்களால், உடுமலை, குடிமங்கலம் வட்டாரத்தில், குறைவாகவே பருத்தி சாகுபடி செய்யப்பட்டது. இந்நிலையில், வரும் ஆடிப்பட்டம் சீசனில், பருத்தி சாகுபடியில் ஈடுபட விவசாயிகள் ஆர்வமாக உள்ளனர்.
விவசாயிகள் கூறியதாவது: கிராமப்புற பொருளாதாரத்தில், பருத்தி முக்கிய பங்கு வகித்தது. பல்வேறு காரணங்களால், கைவிடப்பட்ட பருத்தி சாகுபடியை, மீண்டும், மேற்கொள்ள ஆர்வமாக உள்ளோம். எனவே, தற்போதைய புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் விதைகளை மானியத்தில் வேளாண்துறை வாயிலாக வழங்கினால், பயனுள்ளதாக இருக்கும்.
வரும் ஆடிப்பட்டத்தின் போது, திருமூர்த்தி அணையிலிருந்து, நான்காம் மண்டலத்துக்கு, தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளது. அதையொட்டி, மானியத்திட்டத்தை செயல்படுத்தினால், பருத்தி சாகுபடி பரப்பு அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.
இவ்வாறு, தெரிவித்தனர்.

