/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உயிர்வேலி பராமரிப்பில் விவசாயிகள் ஆர்வம்
/
உயிர்வேலி பராமரிப்பில் விவசாயிகள் ஆர்வம்
ADDED : செப் 12, 2025 10:39 PM
பொங்கலுார்; பயிர்களை கால்நடைகள், காட்டு விலங்குகளிடமிருந்து பாதுகாக்க வேலி அமைப்பது பன்னெடுங்காலமாக வழக்கத்தில் உள்ளது. தற்பொழுது கம்பி வேலி அமைப்பது அதிகரித்து வந்தபோதிலும் அது செலவு மிகுந்ததாகவே உள்ளது.
ஆனால், உயிர் வேலி அமைப்பது செலவு குறைவானது. வறட்சி காலங்களில் கால்நடைகளுக்கான தீவனத்தின் கணிசமான பகுதி உயிர் வேலி மூலமே கிடைக்கிறது. கிராமப்புறங்களில் பெரும்பாலான நிலங்களில் உயிர் வேலிகள் இன்னும் உயிர்ப்புடன் உள்ளது. கிழுவை, மரங்கிழுவை போன்ற தாவரங்கள் உயிர்வேலிக்கு அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. எண்ணற்ற ஜீவராசிகள் உயிர்வேலியை நம்பியே உயிர் வாழ்கின்றன.
உயிர் வேலியில் வளர்ந்து நிற்கும் தாவரங்கள் காலநிலையை தீர்மானிக்கும் சக்தியாக திகழ்கின்றன. மண் அரிப்பை தடுப்பதிலும் மழைவளம் பெறுவதிலும் முக்கிய பங்காற்றுகிறது. பறவைகள், பூச்சிகள், விலங்குகள் என எண்ணற்ற உயிரினங்களின் வாழ்விடமாக திகழும் உயிர் வேலிகள் பூலோகத்தின் பொக்கிஷமாக திகழ்கிறது. ஏராளமான மூலிகை செடிகளின் தாயாகவும் உயிர்வேலி உள்ளது.
ஆண்டுக்கு ஒரு முறை விவசாயிகள் சிறிய அளவில் உயிர் வேலி பராமரிப்பு பணியில் ஈடுபடுகின்றனர். ஆடியில் துவங்கிய உயிர்வேலி பராமரிப்பு பணி புரட்டாசியில் முடிவடைகிறது. கிளைகளை வெட்டி நட்டு விட்டால் எளிதில் பட்டு போகாது. வரவிருக்கும் பருவ மழையை நம்பியே அவை செழித்து வளர்ந்து விடும். எனவே, உயிர்வேலி அமைப்பதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.