/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சட்டவிரோதமாக வெடி வைத்து உடைக்கப்படும் மலை; விவசாயிகள் உள்ளிருப்பு போராட்டம்
/
சட்டவிரோதமாக வெடி வைத்து உடைக்கப்படும் மலை; விவசாயிகள் உள்ளிருப்பு போராட்டம்
சட்டவிரோதமாக வெடி வைத்து உடைக்கப்படும் மலை; விவசாயிகள் உள்ளிருப்பு போராட்டம்
சட்டவிரோதமாக வெடி வைத்து உடைக்கப்படும் மலை; விவசாயிகள் உள்ளிருப்பு போராட்டம்
ADDED : செப் 19, 2025 08:14 PM

உடுமலை; உடுமலை அருகே, மலையை ஆக்கிரமித்து, வெடி வைத்து உடைக்கப்பட்டு வருவது குறித்து, அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் கண்டு கொள்ளாததை கண்டித்து, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் தாலுகா அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
உடுமலை அருகே, ஆண்டியகவுண்டனுார், எலையமுத்துார் பகுதியில், 4 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் ஜம்புக்கல் மலை அமைந்துள்ளது.
மேற்கு தொடர்ச்சிமலையின் ஒரு பகுதியாக உள்ள இந்த மலையில், சமதளப்பரப்பில் ஏழை விவசாயிகளுக்கு அனுபவ பட்டாவும், மேய்ச்சல் உரிமையும் வழங்கப்பட்டிருந்தது.
அரசுக்கு சொந்தமான மலையை, சட்ட விரோதமாகவும், மோசடி ஆவணங்கள் வாயிலாகவும், தனி நபர் ஆக்கிரமித்து மலையை சிதைத்து வருவதோடு, விவசாயிகளையும் தடுத்து வருவதாக, விவசாயிகள் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக, தனியார் சட்ட விரோதமாக ஆபத்தை விளைவிக்கும் வகையில் வெடி வைத்து, மலையை உடைத்தும், பாறைகளை கடத்தி வருவதோடு, மரங்களை வெட்டியும் பசுமையான மலையை அழித்து வருவதாக விவசாயிகள் மாவட்ட கலெக்டர், வனத்துறை, கனிம வளத்துறை உள்ளிட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்துள்ளனர்.
ஆனால், அதிகாரிகள் கண்டு கொள்ளாததோடு, முன் எப்போதும் இல்லாத அளவிற்கு மலை அழிக்கும் பணி தீவிரமாக நடந்து வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் நேற்று, உடுமலை தாலுகா அலுவலகத்தில் புகார் அளிக்க வந்திருந்தனர்.
தாசில்தார் கவுரி சங்கர்,'' நான் என்ன செய்ய முடியும்'' என கூறியதோடு, விவசாயிகளிடம் மனு பெறாமலும், புகார் குறித்து விசாரணை மேற்கொள்ளாமல், எழுந்து சென்றுள்ளார்.
இதனால், அதிருப்தியடைந்த விவசாயிகள் தாலுகா அலுவலகத்திலேயே, தாசில்தார் அறைக்குள்ளேயே காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் கூறியதாவது: மோசடி ஆவணங்கள் தயாரித்து, அரசுக்கு சொந்தமான மலை 'கபளீகரம்' செய்யப்பட்டது குறித்து பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன.
அரசுத்துறை அதிகாரிகள் விசாரணையில், விவசாயிகளுக்கு அனுபவ பட்டா வழங்கியதை, விவசாயிகளுக்கு தெரியாமல், போலி ஆவணங்கள் வாயிலாக பதிவு செய்துள்ளதும், மீதம் உள்ள பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவு மலை அரசுக்கு சொந்தமானது எனவும் உறுதி செய்யப்பட்டது.
ஆனால், உரிய முறையில் விசாரணை நடத்தி ஆக்கிரமிப்புகளை அகற்றாமல், தொடர்ந்து பசுமையான மலையை அழித்து, ஆக்கிரமிக்க முயற்சிக்கும் தனியாருக்கு அதிகாரிகள் சாதகமாக நடந்து கொள்கின்றனர்.
உடனடியாக மலை அழிக்கும் பணியை தடுத்து நிறுத்தவும், மோசடி ஆவணங்கள், மலை அழித்த நபர்களை கைது செய்யவும், அரசுக்கு சொந்தமான மலையை மீட்கவும் வேண்டும். அதுவரை போராட்டம் தொடரும். இவ்வாறு, தெரிவித்தனர்.