/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சினை மாட்டுக்கு ரத்த மாற்று சிகிச்சை: மருத்துவ கல்லுாரிக்கு விவசாயிகள் நன்றி
/
சினை மாட்டுக்கு ரத்த மாற்று சிகிச்சை: மருத்துவ கல்லுாரிக்கு விவசாயிகள் நன்றி
சினை மாட்டுக்கு ரத்த மாற்று சிகிச்சை: மருத்துவ கல்லுாரிக்கு விவசாயிகள் நன்றி
சினை மாட்டுக்கு ரத்த மாற்று சிகிச்சை: மருத்துவ கல்லுாரிக்கு விவசாயிகள் நன்றி
ADDED : செப் 29, 2025 10:38 PM
உடுமலை:
உண்ணி காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்ட சினை மாட்டிற்கு, ரத்தமாற்று சிகிச்சை செய்து குணப்படுத்திய உடுமலை கால்நடை மருத்துவ கல்லுாரி சிகிச்சை வளாக டாக்டர்கள் குழுவினருக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.
உடுமலை கால்நடை மருத்துவ கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் சிகிச்சை வளாகம் பெதப்பம்பட்டியில் அமைந்துள்ளது. இந்த சிகிச்சை வளாகத்துக்கு, தாராபுரத்தைச்சேர்ந்த, விவசாயி ஆறுச்சாமி கலப்பின சினை மாட்டை சிகிச்சைக்கு அழைத்து வந்திருந்தார்.
அந்த மாடு, உணவு உட்கொள்ளாமை, அதிக மூச்சிரைப்பு மற்றும் மிகவும் சோர்ந்து காணப்படுவது போன்ற அறிகுறிகளுடன் இருந்தது.
அங்கு உடற்பரிசோதனை செய்த டாக்டர்கள் மாட்டிற்கு, உண்ணி காய்ச்சல் நோய் பாதித்திருப்பதை கண்டறிந்தனர்; ரத்த மாதிரி பரிசோதனையும் செய்தனர்.
பரிசோதனை முடிவுகளின்படி பாதிக்கப்பட்ட சினை மாடு, 'அனப்பிளாஸ்மாசிஸ்' எனும் ரத்த ஒட்டுண்ணி நோயால் பாதிந்திருந்தது. மாட்டின் ரத்த சிவப்பணுக்கள் மிகவும் குறைந்து காணப்பட்டதால், அந்த மாட்டுக்கு உடல்நிலை மிகவும் மோசமாக இருந்தது. மாட்டுக்கு, ரத்த மாற்று சிகிச்சை செய்ய திட்டமிடப்பட்டு, மற்றொரு மாடு அழைத்து வரப்பட்டு, ரத்த மாதிரியை பரிசோதித்தனர்.
பின்னர், பேராசிரியர் இன்பராஜ் தலைமையிலான டாக்டர்கள் குழுவினர், மருத்துவ கல்லுாரி மாணவியர், மாட்டிற்கு, ரத்த மாற்று சிகிச்சை மேற்கொண்டனர். சுமார் 2 லி., அளவில் ரத்தம் எடுத்து பாதிக்கப்பட்ட மாட்டுக்கு ஏற்றி, சிகிச்சை அளித்தனர். சிகிச்சைக்கு பிறகு சினை மாடு இயல்பு நிலைக்கு திரும்பியது.
'உண்ணி காய்ச்சலால் அதிகம் பாதிக்கும் மாடுகளுக்கு ரத்த சோகை மற்றும் ரத்த குறைபாடு போன்ற பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். கால்நடை வளர்ப்போர் கவனத்துடன் செயல்பட வேண்டும்,' என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
விவசாயிகள் கூறுகையில், கால்நடை மருத்துவ கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், பெதப்பம்பட்டி சிகிச்சை வளாகத்தில் கால்நடைகளுக்கு பல்வேறு மேம்பட்ட சிகிச்சைகள் கிடைக்கிறது.
ரத்த மாற்று சிகிச்சை செய்து மாட்டை காப்பாற்றிய உதவிய பேராசிரியர்கள் மற்றும் மருத்துவ கல்லூரி முதல்வருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம்,' என்றனர்.