/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உரக்கடைகளில் விலை பட்டியல் கட்டாயம் வைக்க சொல்லுங்க! கலெக்டரிடம் விவசாயிகள் வலியுறுத்தல்
/
உரக்கடைகளில் விலை பட்டியல் கட்டாயம் வைக்க சொல்லுங்க! கலெக்டரிடம் விவசாயிகள் வலியுறுத்தல்
உரக்கடைகளில் விலை பட்டியல் கட்டாயம் வைக்க சொல்லுங்க! கலெக்டரிடம் விவசாயிகள் வலியுறுத்தல்
உரக்கடைகளில் விலை பட்டியல் கட்டாயம் வைக்க சொல்லுங்க! கலெக்டரிடம் விவசாயிகள் வலியுறுத்தல்
ADDED : நவ 30, 2024 04:59 AM

திருப்பூர் : 'யூரியா தட்டுப்பாட்டை போக்க வேண்டும்; உரக்கடைகளில், விலை பட்டியல் வைப்பதை கட்டாயமாக்க வேண்டும்' என, விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
திருப்பூர் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை வகித்தார். டி.ஆர்.ஓ.,கார்த்திகேயன், வேளாண்துறை, கூட்டுறவுத்துறை அதிகாரிகள் முன்னிலையில், விவசாயிகள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி பேசினர்.
தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க தலைவர் காளிமுத்து:
பி.ஏ.பி., தொகுப்பில் இருந்து, உப்பாறு அணைக்கு ஐந்து நாட்கள் தண்ணீர் திறக்கப்பட்டது; அணை பாதியளவு நிரம்பியுள்ளது. மழை குறைவாக பெய்துள்ளதால், தாராபுரம் சுற்றுப்பகுதி மக்களுக்காக, உப்பாறு அணைக்கு மீண்டும் தண்ணீர் திறக்க வேண்டும்.
இடையே தடுப்பணைகளில் அரை டி.எம்.சி., தண்ணீர் தேங்கிவிடுவதால், தடுப்பணை இல்லா பாதையில் தண் ணீர் விட வேண்டும். நகராட்சி கழிவுநீர் அமராவதி ஆற்றில் கலக்கிறது; சுத்திகரிப்பு செய்துவிட வேண்டும்.
தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநகர தலைவர் ரமேஷ்:
விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தில் கொடுக் கும் மனுக்களுக்கு, மூன்று மாதமாகியும் பதில் கொடுப்பதில்லை. அவிநாசிபாளையம் சுங்கச்சாவடியில், காய்கறி வாகனங்கள், பால் வாகனங்களுக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும்.
தமிழக விவசாயிகள் சங்க தலைவர் பழனிசாமி:தாராபுரம் சுற்றுப்பகுதியில் உள்ள உரக்கடைகளில், யூரியா தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மற்ற உரம் வாங்கினால் மட்டுமே, யூரியா கொடுக்கின்றனர்.
கூட்டுறவு சங்கம் வாயிலாக, யூரியா வழங்க வேண்டும். கூடுதல் விலைக்கு விற்கின்றனர்; விலை பட்டியல் வைப்பதில்லை. தளவாய்பட்டணம் கூட்டுறவு சங்கத்துக்கு, 10 கி.மீ.,சென்றுவர வேண்டியுள்ளதால், அலங்கியத்தில் கிளை அமைக்க வேண்டும். பன்றி தொல்லையால், நிலக்கடலை, மக்காச்சோளம் பயிரிட முடியவில்லை.
வெள்ளகோவில் பி.ஏ.பி., விவசாயிகள் சங்க நிர்வாகி வேலுசாமி:
பி.ஏ.பி., திட்டத்தில், தண்ணீர் விரையமாவதை தடுக்காததால், சுற்றுகளுக்கு இடைவெளி, 14 நாட்களாக இருந்தது, 24 நாட்களாக மாறியது; தற்போது, 28 நாட்களாகிவிட்டது. மாற்று திட்டத்தையும், வழிமுறைகளையும் கையாள வேண்டும். பி.ஏ.பி., தண்ணீர் திருட்டை கட்டுப்படுத்தும் கண்காணிப்பு குழுவில், பாசன சங்க தலைவர்களையும் உறுப்பினராக சேர்க்க வேண்டும். அப்போதுதான், தண்ணீர் திருட்டு முழுமையாக கட்டுக்குள் வரும்.
தாராபுரம் விவசாயி ரத்தினம்:
அமராவதி உபரிநீரை சேமித்து வைத்து பயன்படுத்தும் புதிய திட்டம் உருவாக்கப்பட வேண்டும். உரக்கடைகளில் விலை பட்டியல் வைக்க வேண்டும். கால்நடை மருத்துவமனைகளிலும் மருந்து தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. தாராபுரம் சுற்றுப்பகுதிகளில், ஆவின் கூட்டுறவு சங்கங்கள் நலிவடைந்துள்ளன; மேம்படுத்த வேண்டும்.
நஞ்சராயன் குளம் பாதுகாப்பு சங்க நிர்வாகி கிருஷ்ணசாமி:
தேசிய நெடுஞ்சாலை ரோட்டுக்குரிய தரத்தில், 10 சதவீதம் கூட இல்லாத, 381ம் எண் ரோட்டுக்கு, சுங்கச்சாவடி அமைப்பதே தவறு. அதுவும் குட்டை நிலத்தை ஆக்கிரமித்து கட்டியது தவறு. உள்ளூர் வாகனம் மற்றும் விவசாயிகள் வாகனங்களுக்கு வரி விலக்கு வழங்க வேண்டும்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் மதுசூதனன்:
மிளகாய், தக்காளி போன்ற செடிகளில், காய்ப்புத்திறன் குறைந்துவிட்டது; தரமான விதைகள் கிடைக்க ஆவன செய்ய வேண்டும். மலைவாழ் மக்கள் சிறு பயிர் சாகுபடி செய்வதால், காபி, குருமிளகு, ஏலக்காய் சாகுபடிக்கு கூட்டுறவு சங்கத்தில் பயிர்க்கடன் வழங்க வேண்டும்.
இவ்வாறு விவசாயிகள் பேசிய பின், கலெக்டர் கிறிஸ்துராஜ் பேசுகையில், ''யூரியா தட்டுப்பாட்டை போக்க, வேளாண்துறை அதிகாரிகள், கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும். கூட்டுறவு சங்கங்களில், யூரியா விற்க ஏற்பாடு செய்யலாம். குறிப்பாக, அனைத்து உரக்கடைகளிலும் தணிக்கை செய்து, உரத்தின் விலை பட்டியல் வைப்பதை கட்டாயமாக்க வேண்டும்.
கால்நடை மருந்தகங்களுக்கு தேவையான மருந்து வந்துவிட்டது; வரும், 3ம் தேதி முதல், கால்நடை கிளை நிலையங்களில் மருந்து தட்டுப்பாடு நீங்கும்,'' என்றார்.

