/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வனத்துறை குறைதீர் கூட்டத்தில் வெளிநடப்பு செய்த விவசாயிகள் கீழ் நிலை அதிகாரிகள் நடத்தியதால் அதிருப்தி
/
வனத்துறை குறைதீர் கூட்டத்தில் வெளிநடப்பு செய்த விவசாயிகள் கீழ் நிலை அதிகாரிகள் நடத்தியதால் அதிருப்தி
வனத்துறை குறைதீர் கூட்டத்தில் வெளிநடப்பு செய்த விவசாயிகள் கீழ் நிலை அதிகாரிகள் நடத்தியதால் அதிருப்தி
வனத்துறை குறைதீர் கூட்டத்தில் வெளிநடப்பு செய்த விவசாயிகள் கீழ் நிலை அதிகாரிகள் நடத்தியதால் அதிருப்தி
ADDED : செப் 12, 2025 09:22 PM

உடுமலை, ;வனத்துறை சார்பில் விவசாயிகள் குறை தீர் கூட்டம் உயர் அதிகாரிகள் நடத்தாமல், கீழ் நிலை அதிகாரிகள் நடத்துவதை கண்டித்து விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர்.
உடுமலை வனச்சரக அலுவலகத்தில், வனத்துறை சார்பில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது. வனவர் மாரிமுத்து தலைமை வகித்தார்.
இதில் பங்கேற்ற விவசாயிகள் பேசியதாவது:
வன எல்லை கிராமங்கள் மட்டுமின்றி, 60 கி.மீ., துாரம் உள்ள கிராமங்களுக்கும் காட்டுப்பன்றிகள் பரவியுள்ளன. ஓடைகள், புதர்களில் வசிக்கும், அவை தென்னை, மக்காச்சோளம், காய்கறி என அனைத்து பயிர்களையும் நாசம் செய்வது தொடர்ந்து வருகிறது.
எல்லையோர கிராம விவசாயிகள் மட்டுமின்றி, காட்டுப்பன்றிகளால் பாதிக்கப்படும் பல ஆயிரக்கணக்கான விவசாயிகள் திரண்டு, ஆறு ஆண்டுக்கு முன் வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினோம்.
அப்போது, மாவட்ட கலெக்டர், எஸ்.பி., மற்றும் மாவட்ட வன அலுவலர் உள்ளிட்டோர், விவசாயிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையில், காட்டுப்பன்றிகள் பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்படும்.
மாதம் ஒரு முறை, மாவட்ட வன அலுவலகத்தில், ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் மற்றும் மாவட்ட வன அலுவலர் தலைமையில், விவசாயிகளுக்கு குறை கேட்பு கூட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால், உறுதியளித்தபடி அதிகாரிகள் குறை கேட்பு கூட்டங்கள் நடத்துவதில்லை. ஆனைமலை புலிகள் காப்பகத்தில், உடுமலை, அமராவதி, கொழுமம், வந்தரவு ஆகிய வனச்சரகங்கள் உள்ள நிலையில், உடுமலையில் மட்டும் பெயரளவிற்கு, ஒரு சில மாதங்கள் கூட்டம் நடக்கிறது. விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகளுக்கு, முறையாக அழைப்பு அனுப்பப்படுவதில்லை.
மாவட்ட வன அலுவலர் நடத்தாமல், வனச்சரக அலுவலர் கூட்டம் நடத்திய நிலையில், தற்போது வனவர் குறை கேட்கும் நிலை என்றால், விவசாயிகள் பிரச்னையில் வனத்துறையின் அலட்சியம் தெரிகிறது.
விவசாயிகள் கூறும் பிரச்னைகளை, அரசுக்கு தெரிவிக்கும் மற்றும் தீர்வு காணும் உயர் அதிகாரிகள் பங்கேற்காமல், கீழ் நிலை அதிகாரிகள் கூட்டம் நடத்துவது ஏற்புடையது அல்ல. எனவே,, மாதம் தோறும், குறிப்பிட்ட நாளில் குறை தீர்க்கும் கூட்டத்தை மாவட்ட வன அலுவலர் தலைமையில் தவறாமல் நடத்த வேண்டும்.
வன எல்லை கிராமங்களில், யானை, குரங்கு, சிறுத்தை என வன விலங்குகள் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்துகிறது. வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தாலும் அலட்சியமாக பதில் அளிக்கின்றனர்.
சிறுதானியங்கள் சாகுபடி செய்ய முடியாத அளவிற்கு மயில்கள் தொந்தரவு அதிகரித்துள்ளது. குரங்குகள் அதிகளவு தென்னை மரங்களை சேதப்படுத்துகிறது. இதனால், விவசாயிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகின்றனர்.
காண்டூர் கால்வாய் வழித்தடத்தில், மலைப்பகுதியிலிருந்து வரும் நீர், மலையடிவார கிராமங்களிலுள்ள ஓடைகள் வழியாக வரும் வகையில் அமைந்துள்ளது. இந்த ஓடைகள் புதர் மண்டி காணப்படுவதால், சிறுத்தை, முள்ளம்பன்றி உள்ளிட்ட வன விலங்குகள் வெளியேறி, விவசாயிகளுக்கு கடும் சிரமத்தினை ஏற்படுத்துகிறது.
நீர் வளத்துறை, விவசாயிகள் புதர்களை அகற்றினால், வனத்துறையினர் மிரட்டுகின்றனர். ஓடை நீர் வழித்தடத்தை துார்வாராமல், புதர் மண்டி காணப்படுவதால், மழை நீர் ரோடுகளில் ஓடி வீணாவதோடு, விவசாய நிலங்களுக்குள் புகுந்தும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
எனவே, மாதம் ஒரு முறை, மாவட்ட வன அலுவலர் விவசாயிகள் குறை தீர் கூட்டம் நடத்த வேண்டும், என வலியுறுத்தி வெளிநடப்பு செய்கிறோம். நடத்தவில்லையென்றால், விவசாய சங்கங்கள் இணைந்து போராட்டம் நடத்துவோம்.
இவ்வாறு, தெரிவித்தனர்.
எனவே, இவர்களது கோரிக்கைகளை தமிழக அரசும், வனத்துறையினரும், நிறைவேற்ற வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.