/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உணவளித்தல் புண்ணியம்; வீணாக்குதல் பாவம்
/
உணவளித்தல் புண்ணியம்; வீணாக்குதல் பாவம்
ADDED : அக் 16, 2025 06:02 AM

உலக உணவு தினமான இன்று(அக்., 16) உணவு பாதுகாப்பு, ஊட்டச்சத்து மிக்க உணவு உள்ளிட்டவற்றை முன்வைத்து இன்று பல்வேறு அமைப்புகள் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. 'பசித்த வயிறுக்கு உணவளித்தல் புண்ணியம் என்றால், உணவை வீணாக்குதல் பாவச்செயலாகும்' என்கின்றனர் உணவின் மகத்துவம் உணர்ந்தோர். உணவு உண்ணும் சரியான முறை, விளைபொருளுக்கு மதிப்புக்கூட்டும் முறை, உணவை வீணாக்கக்கூடாது என்ற விழிப்புணர்வு குறித்து அந்தந்த துறையினர் நம்மிடம் பகிர்ந்தவை
'பேஷன்' ஆக மாறிய நள்ளிரவு சாப்பிடுதல்
ஊட்டச்சத்தில்லா உணவு, வாழ்க்கை நிலை மாற்றத்தால் பலர் நோய்களுக்கு ஆளாகிவிட்டனர்.ஊட்டச்சத்து, சமநிலை உணவால் நோய்களை வெல்ல முடியும். மக்கள் பலருக்கும் உணவு பற்றிய சரியான புரிதல் இல்லை. நாம் எடுத்துக்கொள்ளும் உணவில் மாவுச்சத்து, புரதம், நார்ச்சத்து, வைட்டமின், கனிமங்கள், கொழுப்பு என அனைத்தும் சீரான அளவில் இருக்க வேண்டும். அதுவே சரிவிகித உணவு.
சிலர், காய்கறி குறைவாக அரிசி சாதம் அதிகமாக சாப்பிடுகின்றனர், பழங்களே உண்பதில்லை. சரியான நேரத்தில் சாப்பிட வேண்டும். முக்கியமானதாகக் கருதப்படும் காலை உணவை தவிர்த்து, குறைக்க வேண்டிய இரவு உணவை அதிகளவில் உண்கின்றனர். இதனால் உடல் பருமன், சர்க்கரை நோய் மற்றும் பிற நோய்கள் வருகின்றன. உணவுடன் உடற்பயிற்சியும் அவசியம். 30 நிமிடமாவது தினமும் நடைபயிற்சி செய்ய வேண்டும். அதிக எண்ணெய், இனிப்பு மிக்க உணவுகளை உண்கின்றனர். நள்ளிரவு சாப்பிடுதல் இப்போது 'பேஷன்' ஆகிவிட்டது. அது முற்றிலும் தவறு. அதிகபட்சமாக, இரவு, 9:00 மணிக்குள் சாப்பட்டு முடிக்க வேண்டும். இரவு உணவுக்கும் துாக்கத்திற்கும் குறைந்தது இரண்டு மணி நேரம் இடைவெளி இருக்க வேண்டும்.
- சந்தியா, ஊட்டச்சத்து நிபுணர்.
மதிப்புக்கூட்டினால்தான் விளைபொருளுக்கு மவுசு
நாம் இருக்கும் பகுதியில் எது நன்றாக விளைகிறதோ அதைத்தான் நாம் மதிப்புக்கூட்ட வேண்டும். நம் பகுதியில் அதிகம் கிடைக்கும் வாழையை, சிறு துண்டுகளாக்கல், சிப்ஸ், சாஸ், மாவு, அத்தி, ஜாம், மில்க் ஷேக், வினிகர், வாழைத்தோல் மாவு, கால்நடைத்தீவனம், தண்டு மிட்டாய், ஊறுகாய், ஜூஸ் போன்ற பலவகையாக மதிப்புக்கூட்டி விற்கலாம். நிலக்கடலையில் எண்ணெய், வெண்ணெய், மிட்டாய் போன்று மதிப்புக்கூட்டல் செய்யலாம். எல்லாவற்றையும் மதிப்புக்கூட்டல் செய்ய முடியாது. 30 சதவீதம் விற்பனைக்கு, 30 சதவீதம் ஏற்றுமதி செய்வதற்கு, மீதம் உள்ளது மதிப்புக்கூட்டலுக்கு என்று பல கோணத்தில் விற்பனை செய்ய வேண்டும். பலர் சேர்ந்து ஒன்றாக பெரிய அளவில் செயல்பட வேண்டும். இதுபற்றிய விழிப்புணர்வு, கல்வி அவர்களுக்கு முறையாக கிடைக்க வேண்டும். உலக அளவில் வாழை, நிலக்கடலைக்கு நல்ல வரவேற்பு உண்டு.
அரசு வழங்கும் சலுகையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பிரதமர் உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களுக்கான திட்டத்தின் வாயிலாக உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனம், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள், கூட்டுறவு நிறுவனங்கள் பயன்பெறலாம். தகுதியான திட்ட மதிப்பில், 35 சதவீதம் அல்லது அதிகபட்சம், 10 லட்சம் வரை நிதியுதவி பெறலாம். திருப்பூர் வேளாண்மை துணை இயக்குனர் அலுவலகத்தில், 'ஏற்றுமதி ஆலோசனை மையம்' அமைக்கப்பட்டு ஆலோசனை வழங்கப்படுகிறது.
- சங்கர் கணேஷ், வேளாண்மை உதவி அலுவலர், வேளாண் வணிகத்துறை.
விவசாயிகளை நினையுங்கள் உணவை வீணாக்கமாட்டீர்கள்
இந்தியாவில் உள்ள 140 கோடி மக்களுக்கு தேவைக்கும் அதிகப்படியான உணவை உற்பத்தி செய்கிறோம். அதில், ஏறத்தாழ, 40 கோடி பேருக்கு சரியான உணவு கிடைப்பதில்லை. விவசாயிகள் நாங்கள் அனைத்து உயிர்களுக்கும் உணவு படைக்கிறோம். பொருட்களுக்கு சரியான விலை கிடைக்காதபோதும், தக்காளி எடுத்துக் கொள்ளுங்கள், 10 ரூபாய்க்கு விற்றாலும் சரி, 100 ரூபாய்க்கு விற்றாலும் சரி, நாங்கள் பாகுபாடின்றி மக்களுக்காக உழைத்துக்கொண்டுதான் இருக்கிறோம்.
எங்கள் உழைப்பை ஒவ்வொருவரும் நினைத்துப் பார்க்க வேண்டும். அப்போது, உணவை வீணாக்கும் எண்ணம் வராது. காலை, மதியம், இரவு என எல்லா நேரங்களிலும் புதிதாக சமைத்து, சாப்பிடுகின்றனர். அதில், உணவு வீணாகும் வாய்ப்பு இருக்கிறது. சாப்பிடுவது தவறில்லை, வீணாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பல நாடுகள் இன்று உணவு பஞ்சத்தால் பாதிக்கப்பட்டு பிற நாடுகளிடம் கையேந்தி நிற்கின்றன.
அந்நிலை இந்தியாவுக்கு வரக்கூடாது. அதற்கு மத்திய, மாநில அரசுகள் கவனம் செலுத்தி, புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தி உணவு வீணாகாமல் தடுக்க வேண்டும். ஏனெனில் உணவு உற்பத்தியில் இந்தியா போல தன்னிகரற்ற நாடு எதுவும் இல்லை. முறையான அரசின் திட்டத்தாலும், தனிமனித ஒழுக்கத்தாலும் இணைந்து செயல்பட்டால் எல்லா மக்களும் உணவில்லா நாளே இல்லாமல் பயணிப்பர்.
- காளிமுத்து, மாவட்ட தலைவர், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம்.