/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மக்களுக்கு தீயணைப்பு வீரர்கள் விழிப்புணர்வு
/
மக்களுக்கு தீயணைப்பு வீரர்கள் விழிப்புணர்வு
ADDED : அக் 12, 2025 12:15 AM

திருப்பூர்:தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில், பொதுமக்களுக்கு தீ பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தமிழகம் முழுதும் 'வருகை தந்து கற்றுகொள்ளுங்கள்' என்ற விழிப்புணர்வு முயற்சியை துவங்கியுள்ளனர்.
உள்ளூர் மக்கள் தங்கள் அருகில் உள்ள தீயணைப்பு நிலையங்களுக்கு அழைத்து, அத்தியாவசிய தீ பாதுகாப்பு நடைமுறைகள் கற்று கொடுக்கப்படுகிறது.
அதன் ஒரு பகுதியாக, திருப்பூர் மாவட்டம் முழுதும் உள்ள தீயணைப்பு நிலையங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திருப்பூர் வடக்கில், திருப்பூர் உதவி மாவட்ட அலுவலர் வீரராஜ், தெற்கில் தீயணைப்பு ஸ்டேஷன் அலுவலர் மோகன் ஆகியோர் தலைமையில் நேற்று காலை நடந்தது. மாவட்ட அலுவலர் அண்ணாதுரை பங்கேற்று துவக்கி வைத்தார்.
விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தீயணைப்பு கருவிகளை பொதுமக்கள் பார்வைக்கு வைத்திருந்தனர். வருகை தந்த பொதுமக்கள் ஆபத்தான நேரங்களில் தங்களை எப்படி தற்காத்து கொண்டு, தப்பித்து கொள்ள வேண்டும்; வரும் தீபாவளியை, விபத்தில்லா தீபாவளியாக எப்படி கொண்டாடுவது; தீயணைப்பு கருவிகளை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
பொதுமக்கள் ஆர்வமுடன் பங்கேற்று சந்தேகங்களை கேட்டறிந்தனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற சிக்கண்ணா அரசு கல்லுாரி என்.எஸ்.எஸ்., மாணவ, மாணவியருக்கு, தீயணைப்பு அலுவலர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தொடர்ந்து, வரும் நாட்களில் அருகே உள்ள பள்ளி, கல்லுாரிகள் மற்றும் மக்கள் அதிகம் திரளும் பொது இடங்களுக்கு சென்று தீபாவளியையொட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டுள்ளனர்.