ADDED : அக் 22, 2026 08:11 PM
திருப்பூர்: ‘கோவை சிங்காநல்லுாரில் இருந்து திருச்சி செல்லும் பஸ்களில் வெள்ளகோவில் பயணிகளை ஏறவிடுவதில்லை, ஏறினாலும் இறக்கி விடுகின்றனர்’ என திருப்பூர் மாவட்டம், மூலனுாரை சேர்ந்த பிரகாஷ் என்பவர் முதல்வரின் தனிப்பிரிவுக்கு 'முதல்வரின் முகவரி' ஆப் மூலம் கடந்த 8-ம் தேதி புகார் அனுப்பியிருந்தார்.
புகாரை தொடர்ந்து, அரசு போக்குவரத்துக் கழக கோவை கோட்ட மேலாளர் தரப்பில் இருந்து நேற்று அவருக்கு அனுப்பப்பட்ட பதில்:
எந்த ஊரில் இறங்குபவராக இருந்தாலும் முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் தான் பயணிகளை ஏற்ற வேண்டும் என டிரைவர், நடத்துனர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெள்ளகோவில் உட்பட இடைவழி பயணிகளை ஏற்ற மறுக்கக்கூடாது. சிங்காநல்லுார் பஸ் ஸ்டாண்டில் உள்ள மேற்பார்வையாளர்கள் இதை கண்காணிப்பார்கள். பயணிகளிடம் முரட்டுத்தனமாக பேசும் ஊழியர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
