/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குளங்களில் குவியும் பறவைக்கூட்டம்
/
குளங்களில் குவியும் பறவைக்கூட்டம்
ADDED : செப் 14, 2025 11:48 PM

திருப்பூர்; திருப்பூர் மக்களின் மனத்திற்கு உற்சாகமூட்டும் விதமாக பறவைகள் கூட்டம் கூட்டமாக வந்து குளங்களில் காட்சியளிக்கின்றன. அன்றாடம் பார்க்கும் பறவைகள் தவிர்த்து பல புதிய பறவைகள் வந்த வண்ணமாக இருக்கின்றன.
குரலற்ற பறவை திருப்பூர் இயற்கைக் கழகத் தலைவர் ரவீந்திரன் காமாட்சி கூறியதாவது:
செம்மாண்டம்பாளையம் குளம், வஞ்சிபாளையம் மேற்கே அமைந்துள்ளது. இதில் கண்கவரும் வண்ணம் பல பறவைகள் வந்து குளத்தை அலங்கரிக்கின்றன. குறிப்பிடத்தக்க ஒன்று, மஞ்சள் மூக்கு நாரை. இது உள்நாட்டுப் பறவை. மீன்களை இரையாக உண்ணும்.
மீன்கள் இல்லாதபோது தவளைகள், சிறு பாம்புகள் போன்றவற்றை உண்ணும். இது பெரும்பாலும் உயரமான மரங்களில் கூடு கட்டி இனப்பெருக்கம் செய்யும். கூடு கட்ட வசதியில்லை என்றால் உள்நாட்டிலேயே கிழக்கு திசை நோக்கி பறந்து செல்லும்.
கத்தாங்கண்ணி, கூந்தன்குளம், சில சமயம் வேடந்தாங்கல் வரையும் சென்று கருவேல மரம் போன்ற உயரமான மரங்களில் கூடு கட்டி இனப்பெருக்கம் செய்யும். டிசம்பர் மாதத்தில் சென்று, ஏப்ரல் மாதம் திருப்பூர், கோவை பகுதிகளுக்கு திரும்பும். பிற பறவைகள் போல இதனால் ஒலி எழுப்ப முடியாது. இது குரலற்றது. தன் அலகுகளால் மட்டும் படபடவென அடித்து ஒலியை எழுப்பி பெண் பறவையைக் கவரும்.
நீச்சல் தெரியாது சாமளாபுரம், நஞ்சராயன் போன்ற அருகிலுள்ள குளங்களுக்கு பறந்து செல்லும். இப்பறவைக்கு நீச்சல் தெரியாது. தனது நீண்ட கால்களால் நடந்து சென்று மீன் பிடிக்கும். நீர் நிரம்பி வழியும் இடங்களில் இதனைப் பார்க்க முடியாது. ஆழம் குறைவான பகுதிகளில் மட்டுமே இப்பறவையைக் காண முடியும். நீரின் அளவு தனக்கு ஏதுவாக இல்லையென்றால் வேறு குளத்திற்குச் செல்லும்.
சதுப்பு நிலப் பறவை நஞ்சராயன் குளத்தில் தற்சமயம் அதிகமாக நீலதாழைக்கோழி என்னும் பறவை காணப்படுகிறது. இது சேறும் சகதியுமான சதுப்பு நிலத்தில் இருக்கக்கூடியவை; கோழி வகையைச் சேர்ந்தது. நஞ்சராயன் குளத்தில் ஆகாயத்தாமரை செடிகள் நன்றாகப் படர்ந்திருக்கின்றன. இப்பறவை நீல நிறத்தில் வண்ணமயமாக இருக்கும். கால்களும் விரல்களும் நீளமாக இருப்பதால் இலைமீது நடந்து செல்லும். இது புழு பூச்சிகளை உண்ணும்.
குளங்களில் இவை மட்டுமல்லாமல் பல்வேறு விதமான பறவைகளும் வருகின்றன. கூழைக்கிடா, சிறியநீர்க்காகம், பெரிய நீர்க்காகம், சிறிய, பெரிய மற்றும் நடுத்தர கொக்குகள், பழுப்பு நாரை, செந்நீல நாரை, நீலதாழைக்கோழி, காணாங்கோழி, வெண்மார்பு மீன்கொத்தி, சிறிய மீன்கொத்தி, கருப்பு வெள்ளை மீன்கொத்தி போன்ற மீன்கொத்திகளும் வருகின்றன.
இவ்வாறு, அவர் கூறினார்.