
கந்தசாமி, தமிழாசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி: ஈகை திறன் என்பது தனிப்பட்ட திறமை இல்லை. அது ஒரு நல்ல குணம். இந்த குணம் நம்மை வாழ வைப்பதோடு மற்றோரையும் வாழ வைக்கும்.வான்புகழ் படைத்த வள்ளுவன், ஈகை குணம் குறித்து அழகாகச் சொல்கிறார், 'வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை'.
இதை 'தர்மம் தலை காக்கும், செல்வத்துப் பயனே ஈதல்' என்றும் குறிப்பிடுகின்றனர். அதாவது பொருள் ஈட்டுவது என்பது தனி மனிதன் தன் வயிறை வளர்க்கவும், தன் பெண்டு, தன் பிள்ளை, தன் குடும்பம் என்று குறுகிய எண்ணத்தில் மட்டும் இருந்து விடக்கூடாது.தன்னோடு சேர்ந்தோர்; தன்னை விட ஏழ்மையான நிலையில் இருப்போர், ஆதரவற்ற நிலையில் இருப்போர், உடல் நலம் குன்றியோர் ஆகியோருக்கு இயன்ற உதவியை செய்ய வேண்டும். உன்னிடம் உள்ள அன்பை பிறருடன் நீ பகிர்ந்து கொள்; அன்பு செலுத்தினால் அது உனக்கு பேரன்பாகத் திரும்ப வரும். உன்னிடமுள்ள அறிவை நீ பகிர்ந்து கொள் அது உனக்கு பேரறிவாகத் திரும்பக் கிடைக்கும். ஈகை திறன் என்பது இயன்றதை ஈவதே அன்றி வேறில்லை.