/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆக்கிரமிப்பால் மாயமாகும் நடைபாதைகள்; போக்குவரத்து நெரிசலால் தவிப்பு
/
ஆக்கிரமிப்பால் மாயமாகும் நடைபாதைகள்; போக்குவரத்து நெரிசலால் தவிப்பு
ஆக்கிரமிப்பால் மாயமாகும் நடைபாதைகள்; போக்குவரத்து நெரிசலால் தவிப்பு
ஆக்கிரமிப்பால் மாயமாகும் நடைபாதைகள்; போக்குவரத்து நெரிசலால் தவிப்பு
ADDED : செப் 17, 2025 08:49 PM
உடுமலை; நகரப்பகுதியிலுள்ள தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில், நடைபாதை ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருவதால், போக்குவரத்தில் பல்வேறு பாதிப்புகள் தொடர்கதையாக உள்ளது.
உடுமலை நகரின் மத்தியில் செல்லும் தேசிய நெடுஞ்சாலை மற்றும் நகரை சுற்றிலும் செல்லும் மாநில நெடுஞ்சாலை ரோடுகளில், தற்காலிக மற்றும் நிரந்தர ஆக்கிரமிப்புகள், பல ஆண்டுகளாகியும் அகற்றப்படாமல் உள்ளன.
உடுமலை பஸ் ஸ்டாண்ட், பழைய பஸ் ஸ்டாண்ட் வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், இருபுறங்களிலும் தற்காலிக ஆக்கிரமிப்புகள் அதிகம் உள்ளன.
சில ஆண்டுகளுக்கு முன், தேசிய நெடுஞ்சாலைக்கு சொந்தமான இடங்கள் அளவீடு செய்யப்பட்டு, எல்லைக்கற்கள் நடப்பட்டன. குறுகிய நாட்களில், ஆக்கிரமிப்பாளர்களால், எல்லைக்கற்கள் மறைக்கப்பட்டது.
பின்னர், சிறப்பு திட்டத்தின் கீழ், தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி, பாதசாரிகளுக்காக நடைபாதை அமைக்கப்பட்டது. இதனால், நெரிசலான பகுதியில் ரோட்டையொட்டி, பாதசாரிகள் நடந்து செல்வதும், விபத்து அபாயமும் தவிர்க்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், தற்போது நடைபாதை இருப்பதே தெரியாத அளவுக்கு, தற்காலிக ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளன. நடைபாதைக்கும், தேசிய நெடுஞ்சாலைக்கும் இடையிலான பகுதியில், வாகனங்களை நிறுத்திக்கொள்கின்றனர்.
எனவே, பாதசாரிகள், மீண்டும் நெடுஞ்சாலையை ஒட்டி, நடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
இத்தகைய பிரச்னைகளால், பஸ் ஸ்டாண்டிலிருந்து கொல்லம்பட்டரை வரை இரண்டு கி.மீ.,க்கு வாகனங்கள் ஊர்ந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.
இதே போல், பழைய பஸ் ஸ்டாண்டிலிருந்து துவங்கும், பை-பாஸ் ரோடு, ராஜேந்திரா ரோடு, தாராபுரம் ரோடு, பல்லடம் ரோடு ஆகிய ரோடுகளும், நகர போக்குவரத்தில், முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளன.
இந்த ரோடுகளில், ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளதால், நகரப்பகுதியிலிருந்து புறநகர் பகுதியை எட்டும் வரை வாகனங்கள் திணற வேண்டியுள்ளது. நகர போக்குவரத்து நெரிசலை சீராக்க, நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற, சம்மந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.